நாமக்கல்: ‘மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு அதிமுகவில் முழு பாதுகாப்பு, தேவையான உதவிகள் கிடைக்கும்’ என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி ஏற்பாட்டில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில், மாற்றுக்கட்சியினர் 1,000 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசும்போது, ‘‘பொதுச்செயலாளர் பழனிசாமி போன்ற தலைவர்கள்தான் தமிழகத்துக்கு தேவை. அவரை நம்பாமல் கெட்டவர்கள் ஏராளம், நம்பிகெட்டவர்கள் யாரும் இல்லை. அவரது பயணத்துக்கு மக்கள் மிகுந்த ஆதரவு தருகின்றனர். திமுக ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என மக்கள் முடிவு செய்து விட்டனர்’’ என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: அதிமுகவை பொறுத்தவரை சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். தலைமைக்கு விசுவாசமாக, கட்சிக்கு விசுவாசமாக, மக்களுக்கு சேவை செய்யக்கூடிய அனைவருக்கும் உயர்ந்த பதவி தேடி வரும். மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு அதிமுகவில் முழு பாதுகாப்பு, தேவையான உதவிகள் கிடைக்கும்.
குடிமராமத்து திட்டத்தின் மூலம் பொதுப்பணித்துறை ஏரிகள் திட்ட அனைத்து ஏரிகளையும் தூர்வாரி அதிக தண்ணீர் சேமிக்கும் வழி செய்தோம். கரோனா காலத்திலும், மழை வெள்ளத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது ரூ.12,100 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. நாமக்கல், சேலம் மாவட்டங்களில் மட்டும் ரூ.560 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் தலைவாசலில் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா உருவாக்கி னோம். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் எம்எல்ஏ-க்கள் பொன்.சரஸ்வதி, கே.கே.பி.பாஸ்கர் உள்பட அதிமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.