மாற்றுத் திறனாளிகள் வாங்கும் காருக்கான ஜிஎஸ்டி சலுகை ரத்து – அன்புமணி கண்டனம் | Cancellation of GST Concession for Differently Abled Persons is Injustice: Anbumani

Spread the love

சென்னை: மாற்றுத் திறனாளிகள் கார் வாங்க அளிக்கப்பட்டு வந்த 10% ஜிஎஸ்டி சலுகை ரத்து செய்யப்பட்டதை கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள வலைதள பதிவில்: “உணவுப் பொருள்கள் தொடங்கி வாகனங்கள் வரை பெரும்பான்மையான பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதைக் காரணம் காட்டி மாற்றுத்திறனாளிகள் மகிழுந்து வாங்க வழங்கப்பட்டு வந்த 10% வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டு இருப்பது வருத்தமளிக்கிறது.

ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தத்திற்கு முன்பாக அனைத்து மகிழுந்துகளுக்கும் 28% வரி வசூலிக்கப்பட்டு வந்தது. மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்கும் போது அவர்களுக்கு 10% வரிச் சலுகை வழங்கப்பட்டு, 18% மட்டுமே வரி வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது சிறிய மகிழுந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய மகிழுந்துகளுக்கான வரி 40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு பிறகு மாற்றுத் திறனாளிகள் வாங்கும் சிறிய மகிழுந்துகளுக்கான 10% வரிச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பிரிவினருமே சிறிய மகிழுந்துகளுக்கு 18% வரி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல.

மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை அளிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களுக்கு 10% வரிச் சலுகை வழங்கப்பட்டு வந்தது. பொதுவாகவே மகிழுந்துகளுக்கான வரிகள் குறைக்கப்பட்டதைக் காரணம் காட்டி வரிச் சலுகையை ரத்து செய்வது அநீதியாகும். மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த இந்த வரிச் சலுகை தான் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளும் மகிழுந்து வாங்குவதற்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. இந்த சலுகை நிறுத்தப்பட்டால் அவர்கள் மகிழுந்து வாங்குவதற்கான வாய்ப்புகள் தடைபட்டு போய்விடும்.

எனவே, மாற்றுத் திறனாளிகள் மகிழுந்து வாங்க அளிக்கப்பட்டு வந்த 10% ஜிஎஸ்டி சலுகை ரத்து செய்யப்பட்டதை கைவிட வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு 8% ஜிஎஸ்டி விதிப்பில் மகிழுந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *