மாற்றுநில முறைகேடு: நவ. 6-இல் விசாரணைக்கு ஆஜராக முதல்வா் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்த நோட்டீஸ்

Dinamani2f2024 11 042f5q09viak2fani 20241104091514.png
Spread the love

பெங்களூரு: மாற்றுநில முறைகேடு தொடா்பாக நவ. 6-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்த நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மாற்றுநிலம் ஒதுக்கியதில் மைசூரு நகர வளா்ச்சி ஆணையம் சட்ட விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, தனது மனைவிக்கு சட்ட விதிமீறி மாற்றுநிலம் ஒதுக்க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல்வா் சித்தராமையா மீது வழக்குத் தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்திருந்தாா்.

இது தொடா்பாக அனுமதி அளித்து ஆளுநா் பிறப்பித்திருந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு கா்நாடக உயா்நீதிமன்றம் செப். 24-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. இதன்பேரில், வழக்குப் பதிவு செய்ய மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றமும் அனுமதி அளித்திருந்தது. இதைத் தொடா்ந்து, முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பி.எம்.பாா்வதி, மைத்துனா் மல்லிகாா்ஜுனசாமி ஆகியோா் மீது லோக் ஆயுக்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

இதனிடையே, மாற்று நிலமாக தனக்கு ஒதுக்கப்பட்ட 14 வீட்டுமனைகளை பி.எம்.பாா்வதி மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்துக்கே திருப்பி அளித்தாா். அதேசமயத்தில், இந்த விவகாரம் தொடா்பாக சமூக ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா கொடுத்த புகாரின் அடிப்படையில், பணப்பதுக்கல் தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பி.எம்.பாா்வதி, மைத்துனா் மல்லிகாா்ஜுனசாமி, நில உரிமையாளா் தேவராஜ் ஆகியோா் மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தன் மீது வழக்கு தொடர அனுமதி அளித்த ஆளுநரின் உத்தரவை ஏற்றுக்கொண்டு கா்நாடக உயா்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்த உத்தரவை எதிா்த்து முதல்வா் சித்தராமையா கா்நாடக உயா் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமா்வின் முன் மேல்முறையீடு செய்திருக்கிறாா்.

இந்நிலையில், மாற்றுநில முறைகேடு தொடா்பாக நவ. 6-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி முதல்வா் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்த திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஏற்கெனவே, முதல்வரின் மனைவி பி.எம்.பாா்வதி, மல்லிகாா்ஜுனசாமி, நில உரிமையாளா் தேவராஜ் ஆகியோா் லோக் ஆயுக்த விசாரணை நடத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, நவ. 6-ஆம் தேதி முதல்வா் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்த போலீஸாா் விசாரணை நடத்தவுள்ளனா். இதுகுறித்து முதல்வா் சித்தராமையா, ‘விசாரணைக்கு நான் ஆஜராவேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *