விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க-வின் செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி-யுமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, “தமிழகத்தில் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெற்றி பெறும். கடந்த மாதம் வரை அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்கு யாரும் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் இன்று அ.தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி அமைந்திருக்கிறது. மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நம் கூட்டணி கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினோம்.
அதேசமயம் தி.மு.க கூட்டணி தற்போது கலகலத்துக் கிடக்கிறது. அந்தக் கூட்டணியில் இருப்பவர்கள் தற்போது ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் 40 கேட்கிறார், மற்றொருவர் 30 வேண்டும் என்கிறார். அத்துடன் சீட் இல்லையென்றால் அங்கே போய்விடுவேன் என்று அவர்களை மிரட்டுகின்றனர்.
அவர் வருகிறார், இவர் வருகிறார் என்று நினைக்க வேண்டாம். மூப்பனாரும், வைகோவும் வந்தார்கள், போனார்கள். அதேபோல விஜயகாந்த் வந்தார் போய்விட்டார்.
நான்தான் தி.மு.க-வுக்கு மாற்று சக்தி என்று கமல்ஹாசன் வந்தார். ஆனால் அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோற்றுப் போனார். நாளை சிம்புகூட அரசியலுக்கு வரலாம். அதேபோல இப்போது ஒருவர் வந்திருக்கிறார். சினிமா தியேட்டரிலும், பேருந்திலும் விசில் அடிக்கலாம்.

ஆனால் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்துக்கு விழும் வாக்குகளைத் தடுக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. நம்மைப் பொறுத்தவரை அன்றும் சரி… இன்றும் சரி… தி.மு.க-தான் எதிரி. பல ஜாம்பவான்களை பார்த்த இயக்கம் அ.தி.மு.க. இந்தக் கட்சி தலைவர்களை நம்பி இல்லை.
அதன் தொண்டர்களை நம்பியே இருக்கிறது. அதனடிப்படையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க உறுதியாக தோற்கடிக்கப்படும்” என்றார்.