டெல்டாவைச் சேர்ந்த அதிகாரக் கட்சியின் ‘கலைப்’ புள்ளிக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இனிஷியல் மாண்புமிகுவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம். மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தானும் நாட்டாமையாக வேண்டும் என்பது இனிஷியல் பார்ட்டியின் இஷ்டம். அதிகாரம் பறிபோகும் என்பதால் கலைப் புள்ளி இதற்கு எதிர்ப்பு.
இந்தப் பஞ்சாயத்து முன்பே ஒருமுறை ஆலயத் தலைமை வரைக்கும் வந்தது. அப்போது இருவரும் சமாதானமாகி, ‘இந்தக் கோட்டத் தாண்டி நானும் வரமாட்டேன்… நீயும் வரக்கூடாது. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ என்ற லெவலில் மாவட்டத்தைப் பாகம் பிரித்துக் கொண்டார்கள்.
அண்மையில் அந்த ஒப்பந்தத்தை மீறி, கலைப் புள்ளியின் கட்டத்துக்குள் அனுமதியின்றி கால்வைத்துவிட்டாராம் இனிஷியல் பார்ட்டி. இதையடுத்து மீண்டும் ’கட்டப்’ பஞ்சாயத்து களைகட்ட, “ஸ்டேட்டுக்கே மாண்புமிகு நான்… எனக்கு யாரும் எல்லைக் கோடு போடமுடியாது” என்று தூக்கலாக எகிறிவிட்டாராம் இனிஷியல் பார்ட்டி.
இதையடுத்து, இரண்டு தினங்களுக்கு முன்பு மீண்டும் ஆலயப் பஞ்சாயத்துக் கூடி இருவரையும் அழைத்துப் பேசியதாம். கடைசியில், “தேர்தல் முடியுற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க; ஆகவேண்டியத அப்புறம் பேசிக்கலாம்” என்று பேசிமுடித்து பஞ்சாயத்தைக் கலைத்தார்களாம் ஆலயப் பஞ்சாயத்தார்.