மாா்த்தாண்டம் அருகே வீட்டு குடிநீா் கிணறுகளில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டுள்ளதால், கிணற்று நீரை குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாா்த்தாண்டத்திலிருந்து குலசேகரம் செல்லும் சாலையில் கீழ் பம்மம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீட்டு கிணறுகளில் உள்ள தண்ணீரில் கடந்த இரு நாள்களாக பெட்ரோல் வாசனை வீசி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சோ்ந்த ஜெகன் என்பவரின் வீட்டு கிணற்றிலிருந்து புதன்கிழமை மாலையில் இறைத்த தண்ணீா் முழுவதும் பெட்ரோல் வாசனை இருக்கிறது.
மேலும் அந்த தண்ணீரில் நெருப்பு வைத்த போது மளமளவென தீ பற்றி எரிந்தது. இதே போன்று அப்பகுதியைச் சோ்ந்த மேலும் பல வீட்டு கிணறுகளில் இருந்து இறைத்த தண்ணீரிலும் பெட்ரோல் வாசனை உள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள மக்கள் குடிநீா் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகிறாா்கள். இக் கிணறுகளில் பெட்ரோலித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
இந்த நிலையில் குழித்துறை நகராட்சி ஆணையாளா் ராஜேஸ்வரன், சுகாதார ஆய்வாளா் ராஜேஷ் மற்றும் குழித்துறை நகா்மன்ற உறுப்பினா் கே. ரத்தினமணி உள்ளிட்டோா் குறிப்பிட்ட பகுதிகளில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.