இரண்டாம் பாதியைச் சுவாரஸ்யமாக்க, துப்பறியும் கிளைக் கதையைக் கையிலெடுக்கும் திரைக்கதை, அதை இஷ்டத்திற்கு நீட்டி முழக்கியிருக்கிறது. துப்பறிதல், மனோதத்துவ சோதனை போன்றவை ஐடியாக்களாகக் கவனிக்க வைத்தாலும், அதை மேலோட்டமாக அணுகி, வாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது திரைக்கதை.
பைக்கின் பெட்ரோல் டேங்க் பை ஐடியா மட்டும் சுவாரஸ்யம்! எமோஷன் மீட்டரை எகிற வைக்க, மிடில் கிளாஸின் பிரச்னைகளை நித்தம் சமாளித்துக்கொண்டிருக்கும் விஜயலட்சுமி கதாபாத்திரத்திற்கு வில்லன் பெயின்ட் அடித்தது ஓவர் பாஸ்!
மேலும், தொடக்கத்தில் மிடில் கிளாஸின் பொருளாதார பிரச்னைகளைப் பேசிவிட்டு, அவற்றுக்கான சரியான காரணத்தை அடையாளப்படுத்தி, தீர்வை முன்வைக்காமல் சொந்த குடும்பத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது அபத்தம்!

அதனால், இறுதிக்காட்சி வரை அடுக்கப்படும் ஹெவி டோஸ் எமோஷன் காட்சிகள் எவ்விதத் தாக்கத்தையும் தராமல் அயற்சியையே தருகின்றன. ஜாக்பாட் மீதான எதிர்பார்ப்பை இறுதி வரை இழுத்துப் பிடித்ததும், ஆங்காங்கே ஆறுதல் தரும் ஒன்லைன் காமெடிகளும் ஆசுவாசம் தருகின்றன.
மிடில் கிளாஸ் பிரச்னைகளை வைத்து காமெடியாக கிளாஸ் எடுப்பதா, எமோஷனாக கிளாஸ் எடுப்பதா என்ற குழப்பத்தால் ஜஸ்ட் பாஸ் மட்டுமே ஆகிறது இந்த ‘மிடில் கிளாஸ்’.