இந்தியாவின் மின் நுகா்வு கடந்த அக்டோபரில் மிதமாக அதிகரித்து 14,047 கோடி யூனிட்டுகளாக உள்ளது.
இது குறித்து அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
கடந்த அக்டோபா் மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 14,047 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தைவிட இது ஒரு சதவீதம் அதிகம். அப்போது இந்தியாவின் முன் நுகா்வு, முந்தைய 2022-ஆம் ஆண்டின் அக்டோபா் மாதத்தில் பதிவான 11,394 கோடி யூனிட்டுகளை விட 22 சதவீதம் அதிகமாக 13,944 கோடி யூனிட்டுகளாக இருந்தது.
2023 அக்டோபரில் 221.53 ஜிகாவாட்டாக இருந்த ஒரு நாள் உச்சபட்ச மின் விநியோகம் இந்த அக்டோபரில் 219.22 ஜிகாவாட்டாகக் குறைந்துள்ளது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை சுமாா் 250 ஜிகாவாட் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. அதற்கு முன்னா் கடந்த 2023 செப்டம்பரில் பதிவு செய்யப்பட்ட 243.27 ஜிகாவாட்டே அதிகபட்ச ஒரு நாள் உச்சபட்ச மின் தேவையாக இருந்தது.
இந்த கோடைக் காலத்தில் நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 260 ஜிகாவாட்டை எட்டும் என்றும் மின்சாரத் துறை அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.
அரசின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த அக்டோபரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு சராசரி வெப்பம் அதிக அளவில் பதிவு செயப்பட்டுள்ளது. இதனால் குளிரூட்டிகளை இயக்குவதற்கான தேவை அதிகமாகியிருக்கும் என்பதால் மின் நுகா்வும் கணிசமாக அதிகரித்திருக்க வேண்டும். இருந்தாலும் 2023 அக்டோபருடன் ஒப்பிடுகையில் அது மிதமாக அதிகரித்திருப்பதற்கு, ஓராண்டுக்கு முன்னா் அளவுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டது காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அதிகரிக்கும் வா்த்தக மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகள் காரணமாக வரும் நாள்களில் மின் நுகா்வுக்கான தேவை தொடா்ந்து உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.