புதுச்சேரி: மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவையில் விளக்கேற்றும் போராட்டம் நடத்த ஊர்வலமாக சென்றோரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதை திரும்ப பெற வலியுறுத்தியும், மின் துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட கோரியும் தொடர்ந்து சமூக இயக்கங்கள் சார்பில் தொடர் பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று இரவு சட்டப்பேரவையில் விளக்கேற்றும் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக போராட்டக்காரர்கள் கையில் விளக்குடன் ராஜா தியேட்டர் சந்திப்பு அருகில் ஒன்று கூறினர். அங்கு தொடங்கிய பேரணியை உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர் நேரு தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, “மின் கட்டண உயர்வை கண்டித்து தீவிரமாக போராட்டம் நடத்த வேண்டும். அதனை செய்ய எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன. மின் கட்டண உயர்வு முற்றிலும் திரும்ப பெறப்படும் வரை போராட்டம் நடத்தப்படும்” என்றார் .
இந்த போராட்டத்தில் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம் தலைமை தாங்கினார். இதில் திராவிடர் கழகம் வீரமணி, புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், பெரியார் திராவிடர் கழகம் வீரமோகன் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் சட்டப்பேரவை நோக்கி சென்றது. அரசு மருத்துவமனை அருகில் சென்றபோது போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் அங்கு சிறிதுநேரம் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றனர். வரும் 17ம் தேதி சட்டப்பேரவை எதிரே செம்மறி ஆடுகளுக்கு மனு தரும் போராட்டம் நடத்தவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.