சேலம்: வாழப்பாடி அருகே புழுதிக்குட்டையில் அமைந்துள்ள ஆனைமடுவு அணையின் மதகுகளில் ஒன்று, மின்சார கோளாறு காரணமாக, புதன்கிழமை காலை திடீரென திறந்து கொண்டதில், அணையில் இருந்து நீர் பெருக்கெடுத்து வெளியேறியது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மின்சார கோளாறு சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் மதகு மூடியது. திடீரென மதகு திறந்து நீர் வெளியேறியதால், அணையின் நீர் மட்டம் 0.25 அடி குறைந்தது.
வாழப்பாடி அருகே புழுதிக்குட்டை கிராமத்தில், ஆனைமடுவு ஆற்றின் குறுக்கே75.45 உயரம் கொண்ட ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேறும் நீர் வசிஷ்ட நதியில் கலந்து, கடலூர் அருகே கடலில் கலக்கிறது. கடந்த வட கிழக்குப் பருவமழையின்போது, ஃபெஞ்சல் புயல் காரணமாக, சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, ஆனைமடுவு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆனைமடுவு அணை முழுமையாக நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், ஆனைமடுவு அணையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 67.25 அடி உயரத்துக்கு நீர் இருந்தது. இந்த சூழலில் அணையில் உள்ள 3 மதகுகளில், 2-வது மதகு, திடீரென திறந்து கொண்டது. இதனால், அணையில் இருந்து நீர், வெள்ளமென பெருக்கெடுத்து, வசிஷ்ட நதியில் ஓடியது. இதனை அறிந்து, அணையின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த நீர்வளத்துறை அதிகாரிகள், உடடினயாக, அணையின் மதகினை மூடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே, அணையில் தேங்கியிருந்த நீர் மதகு வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது.
இதனை அறிந்த சுற்று வட்டார மக்கள், ஆற்றின் ஓரத்திலும், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீதும் நின்றபடி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை, வியப்புடன் பார்த்தனர். இந்நிலையில், நீர் வளத்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, திடீரென திறந்து கொண்ட மதகினை உடனடியாக மூடிவிட்டனர். இது குறித்து நீர் வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘மின்சாரக் கோளாறு காரணமாக, ஆனைமடுவு அணையின் மதகுகளில் ஒன்று, திடீரென திறந்து கொண்டது. மின்சாரக் கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டு, மதகு மீண்டும் மூடப்பட்டது.
மதகு திடீரென திறந்து நீர் வெளியேறியதால், 0.25 அடி அளவுக்கு நீர் வெளியேறி ஆற்றில் கலந்தது. இதனால், அணையின் நீர் மட்டம் 67.25 அடியில் இருந்து, 67 அடியாக குறைந்தது என்றார். இதனிடையே, நீர் வளத்துறையின் சேலம் மாவட்ட உயரதிகாரிகள், ஆனைமடுவு அணைக்குச் சென்று, அங்கு மதகில் ஏற்பட்ட பழுது குறித்து ஆய்வு நடத்தினர்.