சென்னை: மின்மாற்றிகளை நுகர்வோரே வாங்க மின்வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் மின்சாரம் உற்பத்தி செய்து நுகர்வோருக்கு விநியோகம் செய்து வருகிறது.தமிழத்தில் தற்போது 3.36 கோடி மின்நுகர்வோர் உள்ளனர். உற்பத்தி நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் ஒவ்வொரு பகுதிக்கும் உள்ள துணை மின்நிலையங்கள் வாயிலாக அந்த குறிப்பிட்ட பகுதிக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நேரடி மின்னோட்டமாக செல்லும் மின்சாரத்தை மாற்று மின்னோட்டமாக மாற்ற மின்மாற்றிகள் பயன்படுகின்றன. ஒரு சில இடங்களில் புதிதாக மின்மாற்றி அமைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக மின்மாற்றிகள் கொள்முதல் செய்யும்போது காலதாமதம் ஏற்படுவதால் இணைப்பு வழங்க அதிக காலம் எடுக்கிறது.
இந்நிலையில் நுகர்வோரே மின்மாற்றிகள் வாங்கித் தர மின்வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.இதுகுறித்து வாரிய அதிகாரிகள் கூறியதாவது: விருப்பமுள்ள நுகர்வோர் முதல் தரநிலை ஆற்றல் திறன் கொண்ட மின்மாற்றிகளை வாங்கித் தர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. எத்தனை அளவுள்ள மின்மாற்றிகள் என்ன விலையில் வாங்க வேண்டும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 16 கி-வோ-ஆ/11 கி-வோ-ஆ மின்மாற்றி ரூ.1,58,710 ஆகவும், 25 கி-வோ-ஆ/11 கி-வோ-ஆ ரூ.1,64,342 ஆகவும், 63 கி-வோ-ஆ/11 கி-வோ-ஆ 3,00,606 ஆகவும், 63 கி-வோ-ஆ/22 கி-வோ-ஆ 3,35,900 ஆகவும், 100 கி-வோ-ஆ/ 22 கி-வோ-ஆ 4,80,450 ஆகவும், 100 கி-வோ-ஆ/22 கி-வோ-ஆ 6,72,581 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மின்வாரியம் மூலம் திருப்பி தரப்படும் அல்லது நுகர்வோரின் கட்டணத்தில் இருந்து கழிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.