மின் வாரியத்தில் 10,000 ‘கேங்மேன்’களுக்கு பதவி உயர்வு கிடைக்குமா? | Will 10000 gangmen in the Electricity Board get promotion explained

1376362
Spread the love

மதுரை: மின் வாரியத்தில் 2021-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 10,000 ‘கேங் மேன்’கள் தற்போது வரை வயர்மேன், எலக்ட்ரீஷியன் போன்ற களப்பணி உதவியாளர் பணியிடங்களுக்கு நியமிக்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் விரைவில் தேர்வு செய்யப்படும் 1,794 பேர் களப்பணி உதவியாளராக நியமிக்கப்பட உள்ளதால், ‘கேன்மேன்’களாக பணிபுரிவோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மின்வாரியத்தில் கடந்த பல ஆண்டுகளாகப் பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பராமரிப்பில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது. மின் வாரிய ஊழியர்களுக்கு மிக அதிகமான பணிச்சுமையும், மக்களுக்குச் சேவைக் குறைபாடும் இருந்து வந்தது. இதனால், மின் வாரியத்தில் ‘கேங்மேன்’ என்ற புதிய பணியிடம் உருவாக்கப்பட்டு அப்பணியிடத்துக்கு ஒப்பந்த, தினக்கூலி பணியாளர்களாக மின்வாரியத்தில் பணிபுரிந்த 15,000 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஐடிஐ முடிக்காததால், மின்வாரிய ‘எலக்ட்ரீஷியன்’, ‘வயர்மேன்’ பணியிடங்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் இருப்பதால் இவர்கள் ‘கேங்மேன்’ ஆக பணி நியமனம் பெற்று அதே பணியிடத்திலே ஓய்வுபெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

17577471832006
சசாங்கன்

இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் ச.சசாங்கன் கூறியதாவது: கடந்த 2021 பிப்ரவரியில் 10,000 பேர் ‘கேங்மேன்’களாக நியமிக்கப்பட்டு பணியாற்று கின்றனர். இவர்களுக்கு 2 ஆண்டு பயிற்சிக்குப் பின் கேங்மேன் முதல்நிலை, முதுநிலை என்ற தரம் வழங்கப்பட்டு கேங்மேன் பதவியிலேயே ஓய்வு பெறும் சூழல் உள்ளது.

தற்போது பணியாளர்கள் பற்றாக்குறையால் இவர்களது பணி மிகவும் இன்றியமையாததாக உள்ளது. இவர்களது பணி நியமனங்களுக்குப் பின்னரும் களப்பிரிவில் பதவி உயர்வு மற்றும் பணி ஓய்வின் காரணமாகவும் ஏற்பட்ட காலியிடங்களில் ஒன்றுகூட இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது.

தொழிற்சங்கங்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக தமிழ் நாடு பொதுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் 1,794 களப்பணி உதவியாளர்கள் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும். 20,000-க்கும் மேல் களப்பணி உதவியாளர் காலியிடங்கள் உள்ள நிலையில், களப் பிரிவுகள் 2600-க்கும் மேல் உள்ள நிலையில் 1,794 எண்ணிக்கை என்பது எந்த வகையிலும் பலனளிக்காது. வயது மூப்பால் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர்.

எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு கூடுதலாக தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 10,000 பேரை களப்பணி உதவியாளர்களாக நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 2021-ல் நியமனம் செய்யப்பட்ட கேங்மேன் பணியாளர்கள் தற்போது நான்கரை ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றுள்ளனர்.

அதனால், தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் 1,794 களப்பணி உதவியாளர்களைத் தேர்வு செய்து பணி நியமனம் செய்வதற்கு முன்பாக கேங்மேன் பணியாளர்களுக்கு களப்பணி உதவியாளர் என பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். களப் பணிக்கு கடந்த பல ஆண்டுகளாக ஆள் எடுக்காததால் பல இடங்களில் ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை செய்கின்றனர்.

இவர்களில் பலர் கடந்த காலங்களில் ஒப்பந்தப் பணியாளர் பணி நியமனத்தின்போது விடுபட்டோரும் உண்டு. நீதிமன்றத்திலும் பணி நியமன உத்தரவு பெற்று காத்திருப்பில் உள்ளனர். இவர்களுக்கு கருணை அடிப்படையில் நிரந்தரப்பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *