மியான்மர் நாட்டின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சகாயிங் மாகாணத்தில் உள்நாட்டு கிளர்ச்சிப்படைக்கும், மியான்மர் ராணுவத்துக்கும் இடையில் கடந்த சில வாரங்களாக மோதல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அம்மாகாணத்தின் லின் தா லூ கிராமத்தில் அமைந்திருந்த புத்த மடத்தின் மீது நேற்று (ஜூலை 10) நள்ளிரவு போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில், 4 குழந்தைகள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டதாக, உள்நாட்டு கிளர்ச்சிப்படை இன்று (ஜூலை 11) தெரிவித்துள்ளது. ஆனால், பலியானோர் எண்ணிக்கை 30 என தகவல்கள் வெளியாகியுள்ளன.