புது தில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மா் நாட்டுக்கு சி-17 விமானம் மூலம் கூடுதலாக 442 மெட்ரிக் டன் நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பியது.
மியான்மரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவில் பயங்கர தொடா் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் நாட்டின் பல பகுதிகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தன. குடியிருப்புகள் உள்பட ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா். அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியா தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மருத்துவக் குழுவையும் அனுப்பி வைத்துள்ளது. சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளும் உதவி வருகின்றன.
கோடையில் குளிர்விக்க வரும் மழை! குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது!
#OperationBrahma @IAF_MCC C-17 plane departs for Mandalay with 31 tons of humanitarian aid, including replenishment stores for the Indian army field hospital unit.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) April 6, 2025
இதனைத் தொடர்ந்து ‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் கீழ் கூடாரங்கள், போா்வைகள், அத்தியாவசிய மருந்துப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், உணவுப் பொருள்கள் என 442 மெட்ரிக் டன் நிவாரண உதவிகளை இந்தியா அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், மியான்மரில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவ மருத்துவ குழுவினருக்கு தேவையான பொருள்கள் உள்பட 31 டன்கள் அளவிலான நிவாரண பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிவாரண பொருள்கள் யாங்கூன் நகரின் தெற்கு கடலோரப் பகுதியில் அமைந்துள்ள திலவா துறைமுகத்தில், யாங்கூன் மாகாண முதல்வரின் வழங்கப்பட்டது என யாங்கூனில் உள்ள இந்தியத் தூதரத்தின் எக்ஸ் வலைதள பக்கத்திலும், வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கரும் பதிவிட்டுள்ளனர்.
மியான்மருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க குவாட் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜாப்பான் நாடுகள் சேர்ந்து 20 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.