புதுச்சேரி: மிலாடி நபியை ஒட்டி ஜிப்மரில் வெளி நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு வரும் 17-ல் இயங்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனினும் அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் வழக்கம் போல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ஜிப்மருக்கு புதுச்சேரி மட்டுமில்லாமல் விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை உட்பட பல ஊர்களில் இருந்து நோயாளிகள் தினசரி சிகிச்சைக்காக வருகின்றனர்.
இந்நிலையில் மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு புதுவை ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மிலாடி நபியையொட்டி வரும் 17ம் தேதி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வரும், 17ம் தேதி ஜிப்மரில் வெளிநோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே அன்றைய தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். எனினும் அவசரச் சிகிச்சைப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். வரும் 16-ம் தேதி ஜிப்மர் மருத்துவமனை வழக்கம் போல் இயங்கும்” என்று ராகேஷ் கூறினார்.
இது பற்றி நோயாளிகள் கூறியதாவது, “விடுமுறை நாட்களில் வெளி நோயாளிகள் சிகிச்சை நிறுத்தப்படுவது குறித்து, சிகிச்சைக்காக முன்பதிவு செய்திருக்கும் நோயாளிகளின் மொபைல் எண்களிலும் ஜிப்மர் நிர்வாகம் தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் வெளியூர்களில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் வீண் அலைச்சலை தவிர்க்க முடியும்” என்று நோயாளிகள் கூறினர்.