மீஞ்சூர் அருகே சரக்கு ரயிலில் இணைப்பு கொக்கி உடைந்து இன்ஜின், பெட்டி கழன்றது – 2 மணி நேரம் சேவை பாதிப்பு | Freight Train Breaks Coupling Hook, Engine, Box Detached near Minjur – 2 Hours Service Disruption

1320391.jpg
Spread the love

சென்னை: அனுப்பம்பட்டு – மீஞ்சூர் இடையே மீஞ்சூர் அருகே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு ரயிலில் இணைப்பு கொக்கி (கப்லிங்) உடைந்து இன்ஜின், பெட்டிகள் தனியே கழன்றது. இதனால், கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் இரண்டரை மணி நேரம் விரைவு, மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

தெலங்கானா மாநிலம் மஞ்சேரியில் இருந்து தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டம் பேரளத்துக்கு 42 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் புறப்பட்டது. இந்த ரயில் பெட்டிகளில் நெல் ஏற்றப்பட்டிருந்தது. இந்த ரயில் நேற்று பிற்பகலில் அனுப்பம்பட்டு ரயில் நிலையத்துக்கும் மீஞ்சூர் ரயில் நிலையத்துக்கும் இடையே சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அப்போது, அந்த ரயிலின் இரண்டு பெட்டிகளுக்கு இடையே இருக்கும் இணைப்பு கொக்கி (கப்லிங்) உடைந்து, இன்ஜினுடன் ஒரு பெட்டி கழன்றுவிட்டது.

இதை அறிந்த ரயில் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தினார். தொடர்ந்து, ரயில்வே உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள், ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையில், கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் மின்சார ரயில் மற்றும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து, மீஞ்சூர் ரயில் நிலையத்துக்கு கழன்றபெட்டி, இன்ஜின் எடுத்து வந்தனர்.

அங்கு உடைந்த கொக்கியை நீக்கிவிட்டு, புதிய கொக்கியை பொருத்தும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டனர். மாலை 4.35 மணிக்கு புதிய கொக்கியை பொருத்தி, இன்ஜின், பெட்டிகளை இணைத்து மீண்டும் சரக்கு ரயில் சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த சம்பவத்தால், கும்மிடிப்பூண்டி- சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் இரண்டரை மணி நேரம் விரைவு மற்றும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *