நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மீஞ்சூர் பஜார் பகுதியில் பொதுக் கழிவறை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் ஒன்று, மீஞ்சூர் பேரூராட்சி. கோயில்கள் நிறைந்த ஊர் என்பதால் வடகாஞ்சி என்றழைக்கப் படும் மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள திருவொற்றியூர்- பொன்னேரி நெடுஞ்சாலை பகுதி, பஜார் பகுதியாக திகழ்கிறது.நாள்தோறும் ஆயிரக் கணக்கானோர் வந்துசெல்லும் இந்த பஜார் பகுதியில் பொதுக் கழிவறை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது: மீஞ்சூர் பேரூராட்சியில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மீஞ்சூரை ஒட்டியுள்ள மேலூர், அத்திப்பட்டு, நெய்தவாயல், மெரடூர், தேவதானம், காட்டூர் உள்ளிட்ட 42 ஊராட்சிகளில் சுமார் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வல்லூர் அனல் மின் நிலையம், வடசென்னை அனல் மின் நிலையம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள், காட்டுப்பள்ளி தனியார் துறைமுகம், கப்பல் கட்டும் தளம், சிமெண்ட் தொழிற்சாலை உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள் மீஞ்சூர் அருகே அமைந்துள்ளன.
இதனால், ஆயிரக்கணக்கானோர் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக நாள்தோறும் மீஞ்சூர் பஜார் பகுதிக்கு வந்து செல்கின்றனர். சுமார் ஒரு கி.மீ., தூரம் அமைந்துள்ள மீஞ்சூர் பஜார் பகுதியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கானோர், பொதுக் கழிவறை இல்லாததால், மிகுந்த அவதிக்குள்ளாயினர்.
குறிப்பாக பெண்கள் பல்வேறு இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து, பேரூராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இனியாவது, மீஞ்சூர் பஜாரில் பொதுக் கழிவறை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேரூராட்சி அதிகாரி ஒருவர் தெரிவிக்கும்போது, “பேருந்து நிலையம், லட்சுமிபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகள் என 8 இடங்களில் பொதுக்கழிவறைகள் மற்றும் சமுதாய கழிவறைகள் உள்ளன. ஆனால், மீஞ்சூர்பஜார் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான இடம் இல்லாததால், பொதுக் கழிவறை அமைக்க முடியாத சூழல் உள்ளது” என்றார்.