தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், இந்திய அரசாங்கத்தையும் சட்டத்தையும் அவர்கள் இருவரும் பகிரங்கமாகக் கேலி செய்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
லண்டனில் இருந்து லலித் மோடி வெளியிட்ட அந்த வீடியோவில், “நாங்கள் இருவரும் தப்பியோடியவர்கள், இந்தியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தப்பியோடியவர்கள்” என்று தன்னை மல்லையாவோடு சேர்த்து கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “மீண்டும் இணையத்தையே ஒரு உலுக்கு உலுக்கப் போகிறேன் (அதிர வைக்கப் போகிறேன்). இதோ உங்களுக்காக ஒன்று. இதைப் பார்த்து பொறாமையிலேயே வயிறு எரியுங்கள்!” எனத் தலைப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ வெளியானது முதல் இந்தியர்களிடையே கடும் எதிர்வினைகளைத் தூண்டியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.