மீண்டும் இபிஎஸ் உடன் இணையும் எண்ணம் இல்லை என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க. கட்சியின் சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் அயனாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது .
இதில் நூற்றுக்கணக்கான அமமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். நிர்வாகிகளின் கூட்டத்திற்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அ.ம.மு.க. கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசியதாவது:
”மத்தியக் கல்விக் கொள்கை வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இவர்கள்(திமுக) ஆட்சி முடியும் தருவாயில் மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளனர். இதனை முன்பே வெளியிட்டு இருக்கலாம், இதனை விமர்சனம் செய்யும் அளவிற்கு ஒன்றுமில்லை.
நான் பெரிதும் மதிக்கும் அரசியல் கட்சித் தலைவர் திருமாவளவன், கடந்த ஓராண்டு காலமாக அவர் பேசுவதில் குழப்பங்கள் தெரிகிறது. முன்பு ஒரு கருத்தை தெரிந்துவிட்டு, பின்பு அது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது என்று கூறுகிறார்.
பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும். அதனை தில்லி தலைவர்கள் செய்ய வேண்டும் என்று நான் கேட்டிருந்தேன். பாஜக தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷ் அழைத்துப் பேசி கூட்டணிக்குள் சேர்த்தால் சந்தோஷம்தான்.
கடந்த ஓராண்டு காலமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறேன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கி 7 ஆண்டுகள் முடிந்து எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம்.
மீண்டும் பழனிசாமியுடன் இணைய வேண்டும் என்கின்ற எண்ணமே எங்களுக்குக் கிடையாது” என்றார்.
இதையும் படிக்க: தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!