இன்டர்ஸ்டெல்லர் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் மீண்டும் மறுவெளியீடாகிறது.
இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்டர்ஸ்டெல்லர். ஆய்விற்காக விண்வெளி செல்லும் நாயகன் மீண்டும் பூமிக்குத் திரும்பும் கதையை உணர்வுப்பூர்வமாகப் பேசிய திரைப்படமாக உருவாகியிருந்தது.
இப்படம் வெளியானதிலிருந்து இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் வரை பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துக்கொண்டே இருக்கிறது. படத்தின் கதையை நோலன் சிந்தித்த விதமும், அதை திரைப்படமாக உருவாக்கிய விதமும் அபாரமானது என்றே விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதையும் படிக்க: இந்தியரா இவர்? உலக ரசிகர்களைக் கிறங்கடிக்கும் ஹனுமன்கைண்ட்!
கடந்த பிப். 7 – பிப். 14 வரை இப்படம் இந்திய ஐமேக்ஸ் திரைகளுக்காக மறுவெளியீடு செய்யப்பட்டது. இதில், பிவிஆர் மற்றும் கோவை பிராட்வே சினிமாஸில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் பல ஆயிரம் ரசிகர்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக படத்தைக் கண்டுகளித்தனர்.

இதனால், ஆச்சரியப்படும் அளவிற்கு இந்திய மறுவெளியீட்டிலும் இன்டர்ஸ்டெல்லர் ரூ. 2 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்தது.
இந்த நிலையில், வருகிற மார்ச் 14 – மார்ச் 21 வரை மீண்டும் 7 நாள்களுக்கு இந்திய ஐமேக்ஸ் திரைகளில் இப்படம் மறுவெளியீடாகும் என அறிவித்துள்ளனர்.
கடந்தமுறை பார்ப்பதற்கான வாய்ப்பும் டிக்கெட்டும் கிடைக்காத ரசிகர்கள் இந்த முறை தவறவிடக்கூடாது என உற்சாகமடைந்துள்ளனர். இப்படத்துடன் டியூன் (dune) படமும் அதேநாளில் மறுவெளியீடாகிறது.