மீண்டும் வருகிறதா கரோனா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

Dinamani2fimport2f20202f122f282foriginal2f2.jpg
Spread the love

கடந்த 2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ், 2020 ஜனவரியில் இந்தியாவில் முதல்முறையாக உறுதி செய்யப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளாக கரோனா பாதிப்பின் தீவிரம் நாட்டையே உலுக்கியது எனலாம்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. தென்கிழக்கு ஆசியா, குறிப்பாக ஹாங்காங், சிங்கப்பூர், சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.

கரோனா அதிகரிப்பு, ஏன்?

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிப்பதற்கு, மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி படிப்படியாகக் குறைவதே காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

“காலம் செல்ல செல்ல, நோயெதிர்ப்பு சக்தி இயற்கையாகவே குறைகின்றது. நோயெதிர்ப்பு சக்தி குறைவதுதான் மக்களை மீண்டும் தொற்றுக்கு ஆளாக்குகிறது. கரோனா தடுப்பூசி போட்டவர்கள்கூட இதனால் பாதிக்க நேரிடலாம்.

மற்றொரு காரணம் சர்வதேச அளவில் பயணங்கள் அதிகரிப்பது. இதனால் வைரஸ்கள் பல நாடுகளுக்கு எளிதாகப் பரவுகிறது. கரோனா வைரஸ்(SARS-CoV-2) தொடர்ந்து மரபணு மாற்றங்களுக்கு உட்படுகிறது. முந்தைய மாறுபாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தற்போதுள்ள வைரஸ் மாறுபாடு அதற்கு உதவாததால் மக்கள் தொற்றுகளுக்கு ஆளாகின்றனர்” ” என்று கொச்சி இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறினார்.

தென்கிழக்கு ஆசியாவில் கரோனா பரவல்

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மே மாதத்தில் கரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது. கரோனா வைரஸின் பிரிவான ஒமிக்ரான் துணை வகைகளான எல்எஃப்.7(LF.7) மற்றும் என்பி.1.8(NB.1.8) மற்றும் ஆகியவையே இதற்குக் காரணம்.

சிங்கப்பூரில் ஏப்ரல் 27 முதல் மே 3 வரை தொற்று பாதிப்பு 28% அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் 11,100 ஆக இருந்த பாதிப்பு தற்போது 14,200 ஆக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் அதிக கரோனா பாதிப்பு ஹாங்காங்கில்தான். 4 வாரங்களுக்கு முன்பு 6.21% ஆக இருந்த தொற்று பாதிப்பு, மே 10 ஆம் தேதி 13.66% ஆக உயர்ந்துள்ளது. அதாவது மார்ச் தொடக்கத்தில் 33 என இருந்த பாதிப்பு, மே 10 ஆம் தேதி 1,042 ஆக அதிகரித்துள்ளது.

மே 3 ஆம் தேதி வாரத்தில் ஹாங்காங்கில் 81 பேர் தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 31 பேர் இறந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பி.1.8(NB.1.8) என்ற உருமாறிய வைரஸ்தான் இதற்கு காரணமென்று கூறப்படுகிறது.

இதேபோல சீனா, தாய்லாந்திலும் கரோனா வைரஸ் அதிகமாகப் பரவி வருகிறது

இந்தியாவில் கரோனா

இந்த மே மாதத்தில் நாட்டில் கரோனா பாதிப்பு சிறிதளவு அதிகரித்துக் காணப்பட்டது. இந்த எண்ணிக்கை 300-யைக் கூடத் தொடவில்லை என்பதால் கவலைப்படத் தேவையில்லை என்று சுகாதார தரவு ஆய்வாளர் கிருஷ்ண பிரசாத் தெரிவித்தார்.

மே 5-12 வாரத்தில் 93 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் மே 13-19 வாரத்தில் 164 ஆக அதிகரித்தது. தற்போது இந்தியாவில் 257 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் கேரளத்தில் கரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.

கேரளம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கர்நாடகம், குஜராத், தில்லியில் இந்த மாதத்தில் கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளன.

நாட்டின் மக்கள்தொகையைக் கருத்தில்கொண்டால் 257 என்பது மிகவும் குறைவு என்று கூறும் அதிகாரிகள், பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறிகள்தான் இருப்பதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

மேலும், தற்போது பருவமழைக் காலம் என்பதால் சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் பரவி வருகின்றன. அதனால் காய்ச்சல், சுவாசக் கோளாறுகள் மூலமாக கரோனா வெளிப்பட்டுள்ளதாக டாக்டர் ஜெயதேவன் தெரிவித்தார்.

பயப்படத் தேவையில்லை

முன்பு இருந்ததைப்போன்ற அச்சுறுத்தல் இல்லை என்பதால் தற்போதைய கரோனா பரவல் குறித்த அச்சம் தேவையில்லை. 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒமிக்ரான் மாறுபாடு வந்ததில் இருந்து தொற்றின் தீவிரம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா உருமாற்றங்கள்

ஒமிக்ரானின் துணை மாறுபாடான ஜேஎன்.1(JN.1)-ன் உருமாற்றங்களான எல்எஃப்.7(LF.7) மற்றும் என்பி.1.8(NB.1.8) ஆகியவையே சிங்கப்பூர், ஹாங்காங்கில் கரோனா பரவலுக்குக் காரணம். இந்த இரண்டும் நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் என்றாலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

இந்த கரோனா வரைஸ் உருமாற்றங்கள் இந்தியாவில் கரோனா பாதிப்பை தீவிரப்படுத்தாது என்று டாக்டர் ஜெயதேவன் கூறுகிறார்.

இதையும் படிக்க | மரங்களைக் காப்பாற்றுங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *