திருச்சி: இந்தியா – இலங்கை மீனவர்களின் நலனுக்காக ‘மீனவர் கார்ப்பரேஷன்’ அமைப்பது குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார்.
இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் நேற்று வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இலங்கை அரசின் வரவு-செலவு திட்ட விவாதம் நாடாளுமன்றத்தில் அண்மையில் தொடங்கியுள்ளது.
இந்த விவாதம் ஒரு மாதம் நடைபெறும். மீனவர்கள் குறித்த விவாதம் நடைபெறும் நாளில் இந்தியா- இலங்கை மீனவர்கள் நலனுக்காக ‘மீனவர் கார்ப்பரேஷன்’ அமைக்க வேண்டும் என்று எங்கள் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் விரிவாகப் பேசுவார்கள்.
மீனவர் கார்ப்பரேஷன் அமைப்பது என்பது, மீனவர் பிரச்சினைகளைக் களைய இருதரப்பும் கூட்டாக செயல்படுவதற்கான யோசனையாகும். இந்த யோசனையை இருதரப்பும் ஏற்றுக்கொண்டால், தேவையற்ற பூசல்கள், பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும் என நம்புகிறோம்.
இலங்கையின் புதிய அரசால் 2-வது முறையாக வரவு- செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒரு மோசமான பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டுவிட்டதற்கான அறிகுறி, இந்த வரவு- செலவு திட்டத்தில் தெளிவாக வெளிப்பட்டுள்ளது. மைனஸ் 7 சதவீதமாக வீழ்ந்துகிடந்த பொருளாதாரம், பிளஸ் 4.5 சதவீதமாக வளர்ந்துள்ளது.
இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அண்மையில் இந்தியா வந்து ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்களை சந்தித்தது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான நட்புறவை வலுப்படுத்துவதற்கான நல்ல முயற்சி. இவ்வாறு அவர் கூறினார்.