மீனவர்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்: இலங்கை அரசிடம் இந்திய தூதரகம் வலியுறுத்தல் | long-standing problem of fishermen should be resolved

1331119.jpg
Spread the love

ராமேசுவரம்: இந்தியா – இலங்கை மீனவர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்று இலங்கை அதிபரின் செயலர் கலாநிதி நந்திக குமாநாயக்கவிடம் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில் 61 தமிழக படகுகளை சிறைபிடித்து, 450 மீனவர்களை இலங்கைகடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் 88 மீனவர்களுக்கு6 மாதம் முதல் 2 ஆண்டு வரைதண்டனை விதிக்கப்பட்டு, இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சிறைபிடிக்கப்படும் படகுகளை நாட்டுடைமை ஆக்குவது, மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிப்பது, அபராதம் கட்டத் தவறினால் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது, அபராதத்தையும், சிறை தண்டனையையும் ஒருசேர விதிப்பது என்பது போன்ற நடவடிக்கைகளில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

16 மீனவர்கள் சிறையில் அடைப்பு: இந்த நிலையில், ராமேசுவரம் மீன்பிடி இறங்குதளத்தில் இருந்து கடலுக்கு சென்ற மகேந்திரன், ராமர்பாண்டி ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப் படகுகளை நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் ரோந்து பணியின் போது கைப்பற்றினர்.

படகுகளில் இருந்த மோகன், மகேந்திரன், ராம்குமார், மாரி கணேஷ், கண்ணன், அன்பரசன், முனீஸ் பிரபு, குருசெல்வம், பாண்டி,முத்துக்கருப்பையா, ராமபாண்டியன், தங்கராஜ், ராஜு, ஆண்டனி பிச்சை, பூமிநாதன், சுந்தரபாண்டி ஆகிய 16 மீனவர்கள் மீதும் எல்லைதாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

16 மீனவர்களையும் நவம்பர் 6வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து,16 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, ‘வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தை திரும்ப பெற இலங்கை அரசுக்கு அழுத்தம் தர வேண்டும், சிறையில் உள்ளமீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி, தமிழக மீனவர்கள் தொடர்ந்துபோராடி வருகின்றனர்.

சமீபத்தில் தமிழக மீனவ பிரதிநிதிகள் டெல்லி சென்று, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து, இலங்கை சிறையில் உள்ளமீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுவலியுறுத்தினர்.

இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில், அதிபர் அநுர குமாரதிசாநாயக்கவின் செயலர் கலாநிதிநந்திக குமாநாயக்கவை, இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜாசந்தித்து பேசியுள்ளார்.

இதுதொடர்பாக இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாக் நீரிணை கடல் பரப்பில் நிலவும் இந்தியா – இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. இரு நாட்டு மீனவர்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மேலும், இந்திய அரசு சார்பாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள்குறித்தும், திட்டப் பணிகளை விரைவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 128 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 23-ம் தேதி ராமேசுவரம் மீனவர்கள் 16 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதுபோன்ற கைது நடவடிக்கைகள், மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறாக உள்ளது.

நம் நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள 128 தமிழக மீனவர்கள், 199 படகுகளை விரைந்து விடுவிக்கவும் தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூட்டு நடவடிக்கை குழு முன்மொழிந்துள்ள ஆலோசனைகள், மீனவர்கள் வாழ்வை சீர்குலைக்கும் இப்பிரச்சினைக்கு நிலையான தீர்வை கொண்டுவரும் என நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *