‘‘மீனவர்களை மீட்க உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்’’ – வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம் | Chief Minister Stalin’s letter to Minister Jaishankar to rescue fishermen in Sri Lankan prisons

1308337.jpg
Spread the love

சென்னை: இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 7-09-2024 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும், IND-TN-08-MM-198, IND-TN-08-MM-28 மற்றும் IND-TN-08-MM-52 பதிவெண்கள் கொண்ட அவர்களது மூன்று மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டில் மட்டும் (7-09-2024 வரை) 350 மீனவர்கள் மற்றும் 49 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் இது மிக அதிகமானது. மேலும், இலங்கை நீதிமன்றங்கள், மீனவர்களின் சக்திக்கு மீறிய அபராதங்களை விதித்து வருகின்றன. இலங்கை அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள், தமிழக மீனவர்கள் அங்கு சிறையில் இருக்கும் காலத்தை நீட்டிக்க வழி செய்வதோடு, ஏற்கெனவே துயரத்தில் உள்ள மீனவக் குடும்பங்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பிற்கும் வழி வகுக்கும்.

எனவே, இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்திடவும், கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தைக் விரைந்து நடத்திடவும் வேண்டும். இதில், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *