மீனவர் கைது விவகாரம் | ‘‘நேரடி நடவடிக்கைகளை சிபிஐ மேற்கொள்ளும்’’: முத்தரசன் | Mutharasan slams Sri Lanka Navy

1307823.jpg
Spread the love

சென்னை: “தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், கட்சி நேரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் முத்தரசன் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடற்படையினால் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள், மீன்பிடி வலைகள், பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் அத்தியாவசிய தொழில் கருவிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்வதும் தமிழக மீனவர்கள் கடலில் இறங்கும் உரிமையை மறுக்கும் அட்டூழியமாக தீவிரமாகி வருகிறது.

கடந்த ஆகஸ்டு 23 ஆம் தேதி நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகபட்டினம் மீனவர்கள் 11 பேர்களை இலங்கை கடற்படை கைது செய்து, காங்கேசன் கடற்படை முகாமில் அடைத்து வைத்துள்ளது. ஆகஸ்டு 3 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்று, நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்டு 5 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் மீனவர்கள் 12 பேர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், 12 மீனவர்களுக்கும், இந்திய மதிப்பில் தலா ரூபாய் 42 லட்சம் விதம் அபராதம் விதித்தது. அபராதம் கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கடலுக்கு சென்று, பிடிபட்ட மீன்களுடன் பத்திராக கரை ஏறி, மீன்களை விற்பதன் மூலம் வாழ்வாதாரம் பெற்றுள்ள மீனவர்களுக்கு ரூ 42 லட்சம் என்பது கற்பனைக்கும் எட்டாத பெரும் தொகையாகும். இந்த நிலையில் நேற்று (07.09.2024) புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்களை நெடுந்தீவு அருகில் கைது செய்துள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலை, ஒன்றிய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் என மீனவர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் ஒன்றிய அரசுக்கு மீனவர்கள் மீன்பிடி உரிமையை பாதுகாக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கும், பிரதமர், அயலுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கும் கடிதம் வழியாக வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டு மீனவர்கள் நலன்களை மதிக்காமல், அவர்களது வாழ்வாதாரத்தை நாசப்படுத்தும் இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை வாய்மூடி மௌனியாக இருந்து வேடிக்கை பார்த்து வருவதும், ஒரு ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளம் கடற்கரை வளம் கொண்ட, தமிழ்நாட்டின் மீனவர்கள் வாழ்வாதாரத்தை அண்டை நாடு தொடர்ந்து பறித்து வருவதும் அரசியல் அமைப்பு சட்டத்தின் மூலம் உறுதி செய்ய வேண்டிய “நாட்டின் இறையாண்மை” கொள்கைக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

இனியும் தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்க முடியாது என்கிற கொந்தளிப்பான நிலை உருவாகி வருகிறது என்பதை ஒன்றிய அரசு உணர்ந்து, தமிழ்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன், ஜனநாயக சக்திகளையும், ஒத்த கருத்துடைய அமைப்புகளையும் அணி திரட்டி, கட்சி நேரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *