மீரட்: முன்னாள் விமானப் படை வீரர் சௌரவ் ராஜ்புத், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகியால் கொலை செய்யப்பட்ட நிலையில், அவர்களது ஆறு வயது குழந்தைக்கு உரிமைகோரு இரு குடும்பங்களுக்கு இடையே சண்டை வலுத்துள்ளது.
தனது தந்தைக்கு என்ன நேர்ந்தது என்பதோ, தாய் எங்கிருக்கிறார் என்பதோ அக்குழந்தைக்கு தெரியவில்லை. இருவரும் ஒன்றாக, விடுமுறையைக் கொண்டாடச் சென்றிருக்கலாம் என்றே நினைத்திருப்பார்.
தற்போது முஸ்கான் பெற்றோருடன் இருக்கும் அந்தக் குட்டிப்பெண் பிஹுவிடம், உண்மை எதையும் சொல்லாமல், எப்போது தாய் தந்தை பற்றி கேட்டாலும் பெற்றோர் இருவரும் லண்டன் சென்றிருப்பதாகவும் விரைவில் வந்துவிடுவார்கள் என்றே கூறியிருக்கிறார்கள்.
இதற்கிடையே, குழந்தையை தங்கள் பராமரிப்பில் வைத்திருக்க இருவீட்டாரும் உரிமை கோரி வருகிறார்கள். இது குறித்து முஸ்கான் தந்தை கூறுகையில், நாங்கள் சௌரவ்வின் வங்கிக் கணக்கிலோ, சொத்திலோ எதையும் செய்ய மாட்டோம். அதனை எழுத்துப்பூர்வமாகக் கூட கொடுத்துவிடவோம். ஆனால் எங்களிடமிருந்து பிஹுவை மட்டும் டிபரிக்க வேண்டாம். எங்களின் வாழ்வே அவர்தான் என்கிறார்.
ஆனால், சௌரவ்வின் மூத்த சகோதரரோ, எனக்கு மகள் இல்லை. என் தம்பியும் இப்போது இல்லை. எனது சொந்த மகளாக அவரை வளர்க்க விரும்புகிறேன். அவர் இங்கு இருந்தால், சௌரவ் எங்களுடன் இருப்பது போல இருக்கும். எனவே, அவளது உரிமை கோரி நாங்கள் நீதிமன்றத்தை நாடவிருக்கிறோம் என்றார்.
கடந்த மார்ச் 4ஆம் தேதி, சௌரவ்வுக்கு மது கொடுத்து, அவரது மனைவி, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து அவரை கொலை செய்து, உடலை பல துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் டிரம்மில் சிமெண்ட் கலவை போட்டு அதற்குள் புதைத்திருந்தது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.