ஆரம்பத்தில் சென்னையிலிருந்து, விடுமுறைக்கு வீட்டிற்குப் போகும் போது, டிவியில், ஏதேனும் ஒரு படத்திலோ, பாடலிலோ, சென்னையில் எங்களுக்கு பரிட்சயமான அல்லது நாங்கள் போய் வந்த இடங்களைப் பார்க்கும் பொழுது ஒரு பரவசம் வரும். பெசன்ட் நகர் எலியட் பீச்லாம் எங்க பீச் தான். பல திரைப்படங்களில் பெசன்ட் நகர் பீச், அந்த ஆர்ச், அந்த சாலை எல்லாம் வரும். முதன்முறை, அந்த மாதிரி, அடையார் பாலத்தை, அதனைச் சுற்றியுள்ள இடங்களை பார்த்த போது நானும் என் தங்கச்சியும் ஒரே உற்சாக கூச்சல்.
என் தங்கச்சி, “ஹே.. இங்க பாரு… தெரியுதா நம்ம அடையார் பாலம் தான், அதுக்கு சைட்ல ஒரு கடை இருக்கும்ல அங்கதான் எடுத்திருக்காங்க பாரு”, “ஆமால்ல”, “ஹேய்… நம்ம பெசன்ட் நகர் பீச் பாரு” என்றெல்லாம் பேசிக் கொள்வதை பார்த்து கடுப்பாவார்கள் என் அக்காவும் தம்பியும்.
“இதுங்க ரெண்டும் வேலைப் பார்க்க தானே சென்னைக்கு போயிருக்குதுங்க… என்னமோ சென்னையை விலைக்கு வாங்கின மாதிரி “எங்க பாலம், எங்க பீச்” ன்னு இதுங்க இம்சை தாங்கல” னு கிண்டல் செய்வாங்க.
நாங்க அதையெல்லாம் கண்டுகொண்டாலும், கருத்தில் கொள்ளாமல், முடிஞ்சா இன்னும் கொஞ்சம் வெறுப்பேற்றுவதை மட்டும் செவ்வனே செய்வோம்.
ஒரு விடுமுறை தின மாலை, விடுதியில் இருந்த தோழிகள் திருவான்மியூர் பீச் போய்ட்டு வரலாம்னு திட்டமிட்டோம். ஒவ்வொருவரிடமும் சொல்லி சொல்லி 15 பேர் வரை சேர்ந்து விட்டோம். எல்லாரும் சேர்ந்து போனா ஒரு தனி சந்தோஷம் தானே. கிளம்பியதில் இருந்து ஒரே உற்சாகம் தான். எல்லா நேரமும் அப்படி அமைந்து விடுவதில்லை.
அடையார் சிக்னலில் ரோடு கிராஸ் செய்யும் பொழுது இரண்டு பசங்க கமெண்ட் “ஹே.. என்ன திடீர்னு மகளிரணி ஊர்வலம் போகுது”.. அதையும் கேட்டு சிரிச்சிட்டு, ஞாயிறு மாலையாதலால் வழக்கமான கூட்டம் இல்லாமல் காலியான பேருந்து ஏறி, எங்க ராஜ்ஜியம் தான்.. பயண தொலைவு என்னவோ வெகு குறைவு. ஆனாலும் ரொம்ப சந்தோஷமா பேசி சிரிச்சிட்டே ஒருவரை ஒருவர் கிண்டல் பண்ணிக்கிட்டே போனதெல்லாம் மறக்கவே முடியாத நினைவுகள்.
பீச்சுல நம்ம மட்டும் கால் நனைச்சு விளையாடுவதே சந்தோஷம்தான். எல்லோரும் சேர்ந்து விளையாடும் போது… அப்பப்பா அலையில் ஓடிப் பிடித்து விளையாடுவது, தண்ணீரில் கால் நனைக்க பயப்படும் தோழிகளை வேண்டுமென்றே வம்பிழுத்து, தண்ணீரில் நனைய வைத்து, என செம்ம ஜாலி பீச் மொமென்ட்ஸ்.