தென் மாவட்டங்களில் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றான கோவில்பட்டியில் பெரும்பாலும் அதிமுகவே வெற்றிபெற இங்கு கணிசமாக இருக்கும் முக்குலத்தோர் வாக்கு வங்கியே காரணம். அதனால் தான் கடந்த முறை தினகரனே எடுத்தேறி வந்து இங்கு போட்டியிட்டார். ஆனபோதும், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு சுமார் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் இங்கு வெற்றிபெற்றார்.
தினகரன் கட்சிக்குப் பின்னால் கோவில்பட்டி தொகுதி முக்குலத்தோர் அணிவகுத்து விட்டால் தனக்கு சிக்கலாகி விடும் எனக் கணக்குப் போட்ட கடம்பூர் ராஜு, முக்குலத்தோர் சமூகத்தினரை குளிர்விக்கும் விதமாக, தான் அமைச்சராக இருந்த போது 2020 அக்டோபரில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஒரு காரியத்தைச் செய்தார்.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்புறம் உள்ள தேவர் சிலை வளாகத்துக்கு தனது சொந்தப் பணத்தில் அரை லகரம் செலவழித்து ஏ.சி. வசதி ஏற்படுத்திக் கொடுத்தார். தேவர் சிலைக்கு ஏ.சி போட்டுக் கொடுத்த அமைச்சரின் செயல் அப்போது முக்குலத்தோர் மத்தியில் பிரமாதமாகப் பேசப்பட்டது. இது 2021-ல் கடம்பூரார் கரை சேரவும் கைகொடுத்தது.
இந்நிலையில், இப்போது ஓபிஎஸ்ஸும் அதிமுகவை விட்டு விலக்கப்பட்டிருப்பதால் 2026 தேர்தல் முடிவுகள் தங்களுக்குச் சாதமாக இருக்குமா என்ற சந்தேகம் கோவில்பட்டி அதிமுக முகாமை இப்போது சுற்ற ஆரம்பித்திருக்கிறது.
ஆனால், “கடந்த முறையைவிட கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் கடம்பூரார் இந்த முறையும் கோவில்பட்டியை தக்கவைப்பார்” என்று சொல்லும் அவரது விசுவாசிகள், “தேவர் திருமகனாருக்கு பாரத ரத்னா விருதுவழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் அதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் இம்முறை கூடுதல் செல்வாக்கைப் பெற்றுத் தரும். இதை வெறும் கோரிக்கையோடு விட்டுவிடாமல், செயல்படுத்தும் விதமாக உள்துறை அமைச்சருக்கு கடிதமும் கொடுத்திருக்கிறார் இபிஎஸ். அதனால் கோவில்பட்டியில் இம்முறையும் அதிமுக வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது” என்கிறார்கள்.
இதனிடையே, கோவில்பட்டியில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றுப் பேசிய கடம்பூர் ராஜு, “ஆலயங்களில் கடவுளுக்கு மட்டும் தான் தங்கக்கவசம் அணிவிக்கப்படும். அதற்கு அடுத்தபடியாக தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது தேவர் பெருமகனாருக்குத்தான். அத்தகைய பெருமையை ஏற்படுத்திக் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
தற்போது தேவர் பெருமகனாருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்று மத்திய அரசிடம் கோரிக்கை வழங்கிய ஒரே இயக்கம் அதிமுக தான். அடுத்த ஆண்டு 119-வது தேவர் ஜெயந்தி விழா நடைபெறும் போது, ‘பாரத ரத்னா தேவர் திருமகனார்’ என்ற அடைமொழியுடன் விழா நடைபெறும்; அதற்குரிய காலம் கனியும்” என்று பேசி தேவரின மக்களின் ஏகோபித்த கரகோஷத்தைப் பெற்றிருக்கிறார்.