“காங்கிரஸ் கட்சிக்காக காத்திருந்தது போதும். நம் வலிமை வைத்து தேர்தலை சந்திக்கலாம்” என்று முதல்வரிடம் மூத்த அமைச்சர்கள் சிலர் ஆலோசனை சொல்லியுள்ளார்கள். காங்கிரஸ் கட்சியும் தங்களது கடைசி கட்ட நகர்வை இன்று இரவுக்குள் நடத்திவிட உள்ளது. இதனால், தமிழக தேர்தல் கூட்டணி கணக்கு இரண்டு தினங்களுக்குள் முடிவுக்கு வர உள்ளது என்கிறார்கள்.
தி.மு.க-வின் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவுடன் கடந்த சனிக்கிழமை அன்று முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்த காங்கிரஸ் கட்சி, தாங்கள் எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் தொகுதிகளை தர தி.மு.க மறுத்துவருவதால் கூட்டணி பேச்சுவார்த்தை இனியும் நடக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தி.மு.க பெரிதும் நம்பி வந்த டெல்லி தலைமையும் தி.மு.க கூட்டணி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய இருப்பதாக வெளியாகும் தகவலால், காங்கிரஸ்- தி.மு.க கூட்டணி முடியும் தருவாயில் வந்துவிட்டது என்கிறார்கள்.

தி.மு.க தரப்பில் நாம் விசாரித்தபோது, “ காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கியது போலவே இப்போது 25 இடங்களை கொடுக்க தி.மு.க திட்டமிட்டது. அவர்கள் ஆரம்பத்திலிருந்து 39 தொகுதிகளுக்கு குறைவான இடங்களை பெற முடியாது என்பதில் உறுதியாக உள்ளார்கள்.
2011 மற்றும் 2016-ம் ஆண்டு தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை தி.மு.க விட்டுக்கொடுத்தது. காங்கிரஸ் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் கொத்தாக அ.தி.மு.க வெற்றிபெற்றது. அதனால் தான் 2021-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளை குறைத்து வெற்றி பெறும் தொகுதிகளை மட்டும் அவர்களுக்கு வழங்கினோம்.