மு
சூரல்மலை: முண்டக்கை மற்றும் சூரல்மலையில் நேரிட்ட மிகப் பயங்கர நிலச்சரிவை நேரடியாகப் பார்த்த ஒரே சாட்சியாக, மிகப்பெரிய பள்ளத்தின் பக்கவாட்டில் நின்றுகொண்டிருக்கிறது கேரள அரசுப் பேருந்து 6 நாள்களுக்குப் பின் புறப்பட்டது.
இந்திய ராணுவம் தற்காலிகமாக அமைத்துக்கொடுத்த பாலத்தின் வழியே கடந்து சென்றது. மீண்டும் எப்போது பயணிகளுடன் திரும்பும் என்பது தெரியாமல்.
முண்டக்கைப் பகுதிக்கு திங்கள்கிழமை இரவு இயக்கப்பட்ட கடைசிப் பேருந்து, நிலச்சரிவின் கோர முகத்தைப் பார்த்தபடி, நூலிழையில் தப்பி நின்றது.
ஒரு ஓராண்டுக்கும் மேலாக, கல்பெட்டாவிலிருந்து முண்டக்கைக்கு இரவில் இயக்கப்பட்டு, சூரல்மலையில் நிறுத்தப்படும். பிறகு காலையில் முண்டக்கையிலிருந்து கல்பெட்டாவுக்கு பயணிகளுடன் புறப்படும். ஆனால் இனி?
ஜூலை 29அம் தேதி இரவு 9.45 மணிக்கு முண்டக்கைக்கு பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு சூரல்மலை அருகே நிறுத்திவைக்கப்பட்டது. இதன் ஓட்டுநரும் நடத்துநரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
இந்தப் பேருந்துதான், முண்டக்கைக்கு திங்கள்கிழமை இரவு இயக்கப்பட்ட கடைசிப் பேருந்து. இனி எப்போது இயக்கப்படும் என்றும் தெரியவில்லை. இது முண்டக்கை செல்ல வேண்டிய பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு, ஆற்றுப் பாலத்தின் வழியாக சூரல்மலை சென்று ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது. இதன் ஓட்டுநரும், நடத்துநரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பியிருக்கிறார்கள். ஆனால், தாங்கள் முண்டக்கையில் இறக்கிவிட்ட பயணிகளின் நிலை என்னவாகியிருக்கும் என்று நினைத்து கண் கலங்கினர்.
சம்பவத்தன்று, பேருந்தின் ஓட்டுநர் சஜிதாவும், நடத்துநர் முகமதுவும் கல்பெட்டாவிலிருந்து பயணிகளுடன் முண்டக்கை சென்று அங்கு பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு சூரல்மலையிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் பேருந்தை பத்திரமாக நிறுத்திவிட்டு தங்களது தங்குமிடத்துக்குச் சென்றுள்ளனர்.
இரவில் பயங்கர சப்தங்கள் கேட்டுள்ளது. இருவருக்கும் என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்திருக்கிறார்கள். இதுதான் நடந்திருக்கும் என்று அவர்களால் கணிக்க முடியவில்லை. அதிகாலை 3 மணிக்கு அரசுப் பேருந்து போக்குவரத்துக் கழகத்திலிருந்து இவர்களை தொடர்பு கொண்டு நிலச்சரிவு நேரிட்டிருப்பதாகவும், நீங்கள் பத்திரமாக இருக்கிறீர்களா என்று கேட்ட போதுதான் இவர்களுக்கு உண்மை தெரிந்தது. ஆனால், அதுவும் முழுமையான உண்மையல்ல. அதன்பிறகு அவர்களுக்கு நெருங்கியவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருந்தபோதுதான் தீவிரம் புரிந்திருக்கும். ஆனாலும் அது ஏன் என்று புரிந்திருக்கவில்லை.
ஆறு மணிக்கு, இவர்கள் வெளியே வந்து பேருந்து நிறுத்தப்பட்ட இடத்தை பார்த்தபோதுதான், உண்மையில் நடந்திருப்பது என்ன என்ற அதிர்ச்சி புரிந்தது.
தாங்கள் கடந்து வந்த பாலத்தையெல்லாம் அடித்துச் சென்றிருக்கிறது நிலச்சரிவு என்பது தெரிந்திருக்கிறது. வந்த பேருந்து இருக்கிறது, இதில் பயணித்து முண்டக்கை வந்த பயணிகள் எங்கிருப்பார்கள்? நிலச்சரிவின் பயங்கரத்தை வெளி உலகுக்குச் சொன்னவர்களில் இவர்களும் ஒருவர்.
அங்கு தாங்கள் கண்ட காட்சிகளை உடனடியாக அனைத்தையும் விடியோவாக பதிவு செய்து தங்களது நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பி அதனை பலருக்கும் அனுப்பினால்தான் உடனடியாக உதவிகள் வரும் என்று கேட்டுக்கொண்டனர். பிறகே மீட்புக் குழு வந்து பணிகள் தொடங்கின.
ஆறு நாள்களாக பேருந்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஞாயிறன்று தற்காலிக பாலம் வழியாக புறப்பட்டுச் சென்றது. மீண்டும் திரும்புமா என்ற கேள்வியோடு..