முதல்வரின் அறைக்குள் முடிவாகும் அறிவிப்புகள்! – பின்னணியில் `நால்வர் அணி'

Spread the love

அடுத்த முறையும் ஆட்சி தொடர்ந்திட வேண்டும் என்கிற முனைப்பில் உள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு, அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு எதிர்கட்சிகளுக்கு ஷாக் கொடுத்துவருகிறது. அரசு துறையின் மூலம் அறிவிப்புகள் வெளியானாலும், அதை கட்டமைக்கும் பணியை நான்கு அதிகாரிகளின் பங்கு பிரதானம் என்கிறார்கள் தலைமை செயலக ஊழியர்கள்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் இறுதி கட்டத்தில் உள்ளது. இன்னும் இரண்டு மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட வேண்டும் என முதல்வர் விரும்புகிறார்.

தி.மு.க அளித்த வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவும், பிற வாக்குறுதிகளில் ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமல் நடவடிக்கை எடுக்க முடியா வாக்குறுதிகளாக 60 வாக்குறுதிகள் இருப்பதாக தி.மு.க தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது. இன்னும் சில வாக்குறுதிகள் செயல்பாட்டில் இருக்கிறது என்கிற விவரங்களையும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் மகளிர் உரிமை தொகையாக 5000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது பெரும் பேசுப்பொருளாக மாறியது. “இந்த அறிவிப்பே வாக்காளர்களை கவரும் அறிவிப்பு என்றும், இத்தனை ஆண்டுகளாக கோடைகால சிறப்புதொகை வழங்காமல் இப்போது வழங்குவதே தேர்தலை மனதில் வைத்தே” என எதிர்கட்சிகள் ஒருபுறம் விமர்சனத்தை முன்வைத்தன. ஆனால், தி.மு.க தரப்பு பெரும் சாதனையை நிகழ்த்தியதாக இந்த அறிவிப்பை கொண்டாடி வருகிறது.

மற்றொருபுறம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பரிசாக ரூபாய் 3000 இரண்டு கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கியது. அதற்கு முன்பாக கடந்த டிசம்பர் மாதம் உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கணினி வழங்கும் வேலையை துவக்கியது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட இந்த திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் கொடுக்கப்பட்டு இரண்டாயிரம் கோடி ரூபாய் நிதியும் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் முதல் கட்டமாக பத்து லட்சம் மாணவர்களுக்கு கணினிகள் வழங்கப்பட்டது. பிப்ரவரி மாதம் இறுதிக்குள் இருபது லட்சம் மாணவர்களுக்கும் கணினி வழங்க வேண்டும் என அரசு வேலையை முடக்கிவிட்டுள்ளது.

மற்றொருபுறம், தமிழகம் முழுவதும் அரசு அறிவித்து செயல்பாட்டில் இருந்த திட்டங்களை அதிவேகத்தில் நிறைவு செய்யும் பணிகள் நடந்துவருகிறது. இப்படி தேர்தலை மனதில் வைத்து அசுர வேகத்தில் திட்டங்களையும், பணிகளை முடித்துவரும் அரசுக்கு பின்புலமாக இருப்பதே குறிப்பிட்ட சில அதிகாரிகள்தான் என்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

ஒவ்வொரு துறையிலும் அரசு மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், புதிய பணிகள் குறித்த விவரங்களை அமைச்சர்கள் ஒப்புதலுக்கு முன்பாகவே துறையின் செயலாளர்கள் நிதித்துறை மற்றும் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள். துறை ரீதியாக வரும் பட்டியலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அதில் சிறப்பான திட்டங்களுக்கு உடனடியாக முதல்வர் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்றுவிடுகின்றனர்.

குறிப்பாக, “நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், முதல்வரின் செயலாளர்களாக உள்ள உமாநாத், சண்முகம், தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகிய நான்கு பேர்தான் இப்போது முதல்வரின் ஆஸ்தான ஆலோசகர்களாக உள்ளார்கள். எந்த துறையிலிருந்து புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு வந்தாலும், அதை கச்சிதமாக செயல்பாட்டுக்கு கொண்டுவருவதே இவர்கள்தான். கடந்த ஐந்து ஆண்டுகளாக சத்தமில்லாமல் இவர்களே முதல்வரின் நம்பிக்கைக்குரிய நபர்களாக இருந்து வருகிறார்கள்” என்கிறார் மூத்த அதிகாரி ஒருவர்.

தமிழக அரசு ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் ஒரே நாளில் 6500 கோடி ரூபாயை எப்படி செலவு செய்தார்கள் என்று கேள்வி எழுந்த நிலையில்?… பொதுநிதியிலிருந்து அதை செயல்படுத்தினோம் என்கிற ஒற்றை விளக்கம் மட்டுமே அரசு தரப்பில் கொடுக்கப்பட்டது.

எந்த நிதியிலிருந்து இதற்கான தொகையைப் பயன்படுத்தினார்கள்? இந்த செலவை ஈடு செய்யும் யுக்தி என்ன? போன்ற எந்த விவரங்களும் தலைமைச் செயலகத்தில் உள்ள மூத்த அதிகாரிகள் பலருக்கும் தெரியவில்லை. அதே போல் தான் பொங்கல் தொகைக்கான பணமும் உடனடியாக வெளியானது. இப்படி அரசு இயந்திரத்தை சத்தமில்லாமல் இயக்கும் இந்த நால்வர் படைதான் இப்போது முதல்வரின் நம்பிக்கைக்குரிய படையாக மாறியுள்ளது.

இவர்களுக்கு ஆலோசனை சொல்லும் அடுத்த நிலையில் தமிழக அரசு நியமித்துள்ள பொருளாதார ஆலோசனை குழுவும், சிறப்பு திட்ட செயலாக்கத்துறையும் உள்ளது. இந்த நால்வர் அணி சொல்லும் திட்டங்களை எப்படிச் செயல்படுத்துவது, அதன் செலவை எப்படி ஈடுகட்டுவது என்கிற ஆலோசனைகளை இந்த குழுவில் உள்ளவர்கள் மூலம் அறிந்துக்கொள்கிறார்கள். இவற்றை ஒழுங்குபடுத்தி முதல்வர் அறையில் வைத்தே திட்டத்திற்கான ஒப்புதலையும் பெற்றுவிடுகிறார்கள்.

பல திட்டங்கள் துறைகளின் அமைச்சர்களுக்கு தெரியும் முன்பே, இவர்களுக்கு தெரிந்துவிடுவதால் அமைச்சர்களையும் எரிச்சலடைய செய்துள்ளது.

அதனால் அமைச்சர்கள் பலரும், `முதல்வர் அமைச்சர்களான எங்களிடம் பெயரளவில் தான் கருத்துக்களை கேட்கிறார். அதன்பிறகு இந்த அதிகாரிகளின் கருத்துக்களையே முழுமையாகக் கேட்டு அதன்படியே திட்டங்களையும் அறிவிக்கிறார்’ என்று புகைச்சலுடன் சொல்லிவந்தார்கள்.

அமைச்சர்களின் புகைச்சலை முதல்வரும் கண்டுக்கொள்வது இல்லை. அதனால் இந்த அதிகாரிகளின் படையே முதல்வரின் முதுகெலும்பாக இறுதிகட்டத்தில் இப்போது களமாடி வருகிறது. தேர்தல் நெருக்கத்தில் இந்த அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் என்கிற தகவலும் வருவதால், அதற்கு முன்பாக அரசு நிறைவேற்றிட நினைக்கும் திட்டங்களை இவர்களை வைத்து நிறைவேற்றிட நினைக்கிறார் முதல்வர்.

இந்த அதிகாரிகள் படைதான் இடைக்கால பட்ஜெட்டையும் இறுதி செய்துள்ளது. அதனாலே எதிர்க்கட்சிகளும் இந்த நால்வர் அணி மீதே ஏக கடுப்பில் உள்ளார்கள். `ஆட்சி மாற்றம் நடக்கட்டும் இவர்களை பார்த்துக்கொள்கிறோம்’ என்று சொல்கிறார்கள் அ.தி.மு.க-வினர். அதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது” என்றனர் விரிவாக.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *