முதல்வரின் முதலீடு திரட்டும் பயணம் மோசடிப் பயணம் என்பது நிரூபணம்: அன்புமணி | Chief Minister investment fundraising trip is proof of fraud Anbumani opinion

1375130
Spread the love

சென்னை: முதல்வரின் முதலீடு திரட்டும் பயணம் மோசடிப் பயணம். திருவள்ளூரில் இயங்கும் நிறுவனங்களிடம் முதலீடு திரட்டுவதற்கு ஜெர்மனி பயணம் தேவையாஎன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அங்கு 3 நிறுவனங்களுடன் ரூ.3201 கோடி முதலீடு திரட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழக அரசு கையெழுத்திட்டிருக்கிறது.

ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருக்கும் எந்த நிறுவனமும் புதிய நிறுவனம் அல்ல. அவை அனைத்தும் ஏற்கனவே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வருபவை தான். முதல்வரின் முதலீடு திரட்டும் பயணம் மோசடிப் பயணம் என்பது அவரது பயணத்தின் முதல் நாளிலேயே உறுதியாகிவிட்டது.

ரூ.2000 கோடி முதலீடு செய்யப்போவதாக கூறப்படும் Knorr-Bremse என்ற நிறுவனத்தின் செயற்கை அறிவுத் திறன் மையம் சென்னை கிண்டிக்கு அருகில் செயல்பட்டு வருகிறது. ரூ.1000 கோடி முதலீடு செய்யவிருக்கும் Nordex குழுமத்தின் காற்றாலை தயாரிப்பு நிறுவனம் சென்னைக்கு அருகில் பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.

மூன்றாவதாக ரூ.201 கோடி முதலீடு செய்யவுள்ள ebm-papst நிறுவனத்தின் உலக திறன் மையம் சென்னை தரமணியில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் கடைசி இரு முதலீடுகளும் ஏற்கெனவே செயல்பட்டு வரும் அமைப்புகளின் விரிவாக்கத்திற்காக செய்யப்படுபவை ஆகும்.

முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள ரூ.3201 கோடி முதலீடுகளும் இயல்பாக வந்திருக்கக் கூடியவை தான். தமிழக அரசு நினைத்திருந்தால் அதிகாரிகள் முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்க முடியும்.

இதற்காக முதல்வர் ஸ்டாலின் படை பரிவாரங்களுடன் ஜெர்மனி சென்றிருப்பதைப் பார்க்கும் போது, கொக்கை நேரடியாக பிடிப்பதற்கு பதிலாக அதன் தலையில் வெண்ணெயை வைத்து, அது உருகி கொக்கின் கண்களை மறைத்தவுடன் அதை பிடிப்பதற்கு ஒப்பான செயலாகும்.

முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் வீணாணவை; மக்களின் வரிப்பணத்தை அழிக்கக் கூடியவை என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். ஜெர்மனி பயணத்தையும் சேர்த்து இதுவரை வெளிநாடுகளுக்கு சென்று கையெழுத்திடப்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி தான். இது ஒட்டுமொத்தமாக கையெழுத்திடப்பட்டதாகக் கூறப்படும் ரூ.10.65 லட்சத்துடன் ஒப்பிடும் போது, வெறும் 2% மட்டும் தான்.

தமிழ்நாட்டுக்கான மொத்த முதலீட்டு ஒப்பந்தங்களில் 98 விழுக்காட்டை சென்னையில் இருந்தபடியே செலவில்லாமல் சாத்தியமாக்க முடியும் எனும் போது, வெறும் 2% முதலீட்டுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது உடலை வருத்திக்கொண்டு வெளிநாட்டுக்கு பயணம் செய்ய வேண்டிய தேவை என்ன? என்பது குறித்து தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *