முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக தொடரப்பட்ட ஜெயக்குமார் மீதான வழக்கு ரத்து | HC quashed Case against former Minister Jayakumar for raising slogans against the CM

1292227.jpg
Spread the love

சென்னை: திருச்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட சென்றபோது தமிழக முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பதியப்பபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டுப்போட முயன்ற நபரை தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.

இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி அந்த காவல் நிலையத்துக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினருடன் சென்ற ஜெயக்குமார் கையெழுத்திட்டார். அப்போது தமிழக அரசுக்கும், காவல்துறை மற்றும் தமிழக முதல்வருக்கும் எதிராக கோஷங்களை எழுப்பியதாக ஜெயக்குமார் மீது கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில், ஜெயக்குமார் காவல் துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதற்கு மட்டும் வருத்தம் தெரிவித்துள்ளதார். தமிழக அரசு மற்றும் முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதற்கு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை. எனவே, இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது ஜெயக்குமார் தரப்பில், தனது ஆதரவாளர்கள் தானாகவே காவல் நிலையத்துக்கு வந்து விட்டனர். அவர்கள் எழுப்பிய அனைத்து கோஷங்களுக்கும் வருத்தம் தெரிவித்துள்ளதாக வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *