முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமை காலை வழக்கமான நடைப்பயிற்சியின்போது லேசாக தலைசுற்றல் ஏற்பட்ட நிலையில், அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல்வர் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அவர் மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளைக் கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், பரிசோதனையின் ஒரு பகுதியாக அவருக்கு இன்று(வியாழக்கிழமை) காலை ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக மூத்த அமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வரின் உடல்நிலை மற்றும் பரிசோதனைகள் தொடர்பாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.