‘முதல்வர் தீபாவளி வாழ்த்து கூற வேண்டும் என கேட்டால் சபாநாயகர் ஏன் பதறுகிறார்?’ – வானதி சீனிவாசன் கேள்வி | Why does the Speaker get nervous when asked to the Chief Minister on Diwali greetings? – Vanathi Srinivasan questions

1380206
Spread the love

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் தீபாவளி வாழ்த்து கூற வேண்டும் என சட்டப்பேரவையில் கேட்டால், சபாநாயகர் அப்பாவு ஏன் பதறுகிறார் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுத்தவர்கள், இப்போது, “தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்” என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வர் என்பவர் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவர். தன்னை நாத்திகர் என்று கூறிக் கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. ஆனால், மற்ற மதங்களின் பண்டிகைகளுக்கு ஆண்டுதோறும் தவறாமல் வாழ்த்து கூறுகிறார்.

திமுகவின் ‘மதச்சார்பின்மை’ என்பதும், திமுகவின் ‘நாத்திகம்’ என்பதும் ‘இந்து மத வெறுப்பு’ என்பதை வாய்ப்பு கிடைக்கும் போதேல்லாம் முதல்வர் நிரூபித்து வருகிறார்.

கடந்த 2021-ல் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் தீபாவளி, தைப்பூசம் போன்ற இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். ஆனால், ‘திமுகவில் 90 சதவீத இந்துக்கள் இருக்கிறார்கள்’ என்று கூறும் முதல்வர், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூற விடாப்பிடியாக மறுத்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று துணை நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் பேசும்போது, “எதிர்க்கட்சியான பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மையை பாராட்டுகிறேன். நன்றி தெரிவிக்கிறேன். அதே பெருந்தன்மையோடு தீபாவளி பண்டிகைக்கும் வாழ்த்து கூற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தேன்.

உடனே, பதறிய சபாநாயகர் அப்பாவு, “அதெல்லாம் இங்கே பேசக் கூடாது. மதம் பற்றி இங்கே விவாதம் நடைபெறவில்லை. நிதி பற்றி மட்டுமே பேச வேண்டும்” எனக்கூறி நான் பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார்.

ஆனால், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா பேசும்போது, இஸ்ரேல் காசா பிரச்சினை பற்றி நீண்டநேரம் உரையாற்றினார். அதையெல்லாம் அனுமதித்த சபாநாயகர் அப்பாவு, தீபாவளி என்று சொன்னதும் ஏன் பதறினார் என்பது புரியவில்லை.

இதுவரை தீபாவளிக்கு வாழ்த்து சொல்ல மறுத்தவர்கள், இப்போது, “தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்” என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர், உலகெங்கும் வாழும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து சொல்லுங்கள் என்று பேசியதைக் கூட நீக்குகிறார்கள். இதைவிட பாசிசம் ஏதும் இருக்க முடியாது. இப்படி பாசிசத்தின் மொத்த உருவகமான திமுகவினர், ஜனநாயகம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *