முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ரூ.38,699 கோடி முதலீட்டுக்கான 14 திட்டங்களுக்கு ஒப்புதல் | tn cm stalin heads cabinet ministry meeting

1323710.jpg
Spread the love

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 46,931 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.38,698.80 கோடி மதிப்பிலான 14 முதலீட்டு திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், நிதி, தொழில் உள்ளிட்ட துறைகளின் செயலர்கள், முதல்வர் மற்றும் துணை முதல்வரின் செயலர்கள் பங்கேற்றனர். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்குவது மற்றும் மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:

அமைச்சரவை கூட்டத்தில் ரூ.38,698.80 கோடி முதலீட்டுக்கான 14 புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 46,931 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக, மின்னணு துறை சார்ந்த பிரின்ட்டட் சர்க்யூட் போர்டுகள், குறைந்த மின்னழுத்த பேனல்கள், கைபேசி தயாரிப்புகளுக்கான காட்சிமுறை உதிரிபாகங்கள் மற்றும் உறைதயாரித்தல், பயணிகள் சொகுசுவாகன உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள், உயர் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் அதற்கான மென்பொருட்கள், பாதுகாப்பு துறைக்கான கருவிகள், ஊசி மருந்துகள் மற்றும் இதர மருந்து பொருட்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியுடன் பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உற்பத்தி, மின்வாகனங்கள், தொலைதொடர்பு நெட்வொர்க் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்த 14 முதலீடுகள் அமைந்துள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா குழும துணை நிறுவனமான டாடா மோட்டார்ஸ் ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில், 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குழும துணைநிறுவனமான யூசான் டெக்னாலஜி (இந்தியா) நிறுவனம் ரூ.13,180 கோடி முதலீட்டில் 14 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் திட்டம்,தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பிஎஸ்ஜி குழும துணை நிறுவனமான லீப் கிரீன் எனர்ஜி சார்பில் ரூ.10,375 கோடி முதலீட்டில் 3 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அரியலூரில் தைவானை சேர்ந்த டீன் ஷூஸ் குழும துணை நிறுவனமான ஃப்ரீ டிரெண்ட் இண்டஸ்ட்ரியல் இந்தியா சார்பில் ரூ.1,000 கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் திட்டம், காஞ்சிபுரத்தில் கேன்ஸ்சர்க்யூட்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் ரூ.1,395 கோடி முதலீட்டில் 1,033 பேருக்கு வேலை அளிக்கும் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.612.60 கோடி முதலீட்டில் 1,200 பேருக்கு வேலை அளிக்கும் திட்டம் என குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முதலீடுகள் வரப்பெற்றுள்ளன.

அந்த முதலீடுகளுக்கு, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, விருதுநகர் திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்டதென் மாவட்டங்கள், காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்கள் என ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமையும் வகையில் தொழில் திட்டங்கள் வந்துள்ளன.

தொழில் நிறுவனங்களுக்கு தொழில் கொள்கை அடிப்படையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், துறைகளுக்கு இடையிலான குழு பரிந்துரைக்கும் சலுகைகளும் வழங்கப்படும்.

முதல்வரின் அமெரிக்க பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், சமீபத்தில் உருவாக்கப்பட்ட முதலீடுகளுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அமைப்பு ரீதியிலான சில சலுகைகளுக்கு நீட்டிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தமிழக அரசின் இலக்கு. தமிழகத்தில் படித்த, தகுதியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இது மட்டுமின்றி, மேலும் சில நிறுவனங்களின் முதலீடுகளுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *