சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இல்லத்திற்கு நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்று தீவிர சோதனை மேற்கொண்டதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இந்நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். குறிப்பாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரின் செல்போன் எண்ணை வைத்து அவரது இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பால முருகன் (45) என்பவரை நேற்று இரவு கைது சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாலமுருகன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும் மதுபோதைக்கு அடிமையாகி மனைவியை தொல்லை செய்து வந்ததால் ஆறு மாதங்களுக்கு முன் மனைவி அவரை பிரிந்து சென்றது தெரியவந்தது.
அதுமட்டுமின்றி பாலமுருகன் இருமுறை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிறைக்கு சென்று வந்தவர் என்பதும், பிரிந்து சென்ற மனைவி திருப்பி வராததால் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு போதையில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
