முதல்வர் ஸ்டாலினுக்கு கேரளாவில் உற்சாக வரவேற்பு: வைக்கம் பெரியார் நினைவகத்தை இன்று திறக்கிறார் | Chief Minister Stalin receives enthusiastic welcome in Kerala

1342983.jpg
Spread the love

சென்னை: வைக்கத்தில் இன்று நடைபெறும் பெரியார் நினைவக திறப்பு விழாவுக்காக கேரளா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர்கள், திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

1924-ல் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் நடைபெற்ற கோயில் நுழைவு போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து பெரியார் கலந்து கொண்டார். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா தற்போது கொண்டாடப்படுகிறது. அப்போராட்டத்தை நினைவுகூரும் விதமாக, தந்தை பெரியாருக்கு வைக்கத்தில் சிலை அமைக்கப்பட்டு 1994-ம் ஆண்டு நினைவகம் திறக்கப்பட்டது. அந்த நினைவகம் பழமையாக மாறியதால், முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.8.14 கோடியில் நினைவகத்தை சீரமைக்க உத்தரவிட்டார். அதன்படி, சீரமைப்பு பணி நிறைவடைந்துள்ளது.

இதில், பெரியார் சிலை, பெரியார் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் புகைப்படங்கள் அடங்கிய நிரந்தர கண்காட்சிக் கூடம், நூலகம், பார்வையாளர்கள் மாடம், சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இந்நிலையில், பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதல்வர்ஸ்டாலின் இன்று திறக்கிறார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு, கொச்சியில் உள்ள நெடும்பாசேரி விமான நிலையத்தை சென்றடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோட்டயம் சென்றார். அங்கு முதல்வரை அமைச்சர்கள் எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், கேரள திமுகவினர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

வைக்கத்தில் இன்று நடைபெறும் விழாவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையேற்கிறார். தி.க.தலைவர் கி.வீரமணி முன்னிலை வகிக்கிறார். தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், கேரள அமைச்சர்கள் வி.என்.வாசவன், சஜி செரியன், கோட்டயம் எம்.பி. கே.பிரான்சிஸ் ஜார்ஜ், வைக்கம் எம்எல்ஏ சி.கே.ஆஷா, மாவட்ட ஆட்சியர் ஜான் வி.சாமுவேல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். தமிழக தலைமைச்செயலர் நா.முருகானந்தம் வரவேற்கிறார். கேரள

தலைமைச் செயலர் சாரதா முரளிதரன் நன்றி தெரிவிக்கிறார். தனது வைக்கம் பயணம் குறித்து முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *