சென்னை: “முதல்வர் ஸ்டாலினுக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் நட்பு ரீதியாக சந்தித்து நலம் விசாரித்தோம். நன்றாக இருப்பதாக கூறினார். விரைவில் குணமடைய வேண்டுமென அவருக்கு வாழ்த்து கூறிவிட்டு வந்தோம்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார்.
திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பிரேமலதா விஜயகாந்த் இன்று சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியது: “எனது திருமணம் கருணாநிதி தலைமையில்தான் நடைபெற்றது. விஜயகாந்துக்கும், கருணாநிதிக்கும் 45 ஆண்டுகால நட்பு இருந்தது. அதேபோல், முதல்வர் மு.க.ஸ்டாலினும், விஜயகாந்துடன் நட்பில் இருந்தார். விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நலம் விசாரித்தார். தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் நட்புரீதியாக சந்தித்து நலம் விசாரித்தோம். நன்றாக இருப்பதாக கூறினார். விரைவில் குணமடைய வேண்டுமென அவருக்கு வாழ்த்து கூறிவிட்டு வந்தோம்.
இந்த சந்திப்பு 100 சதவீதம் மரியாதை நிமித்தமானது. அவர்கள் எங்கள் குடும்பத்தின் மீது வைத்த பற்றும், நாங்கள் அவர்கள் குடும்பத்தின் மீது வைத்துள்ள பற்றின் வெளிப்பாடுதான் இந்தச் சந்திப்பு. தேமுதிகவின் வளர்ச்சியில் நாங்கள் தற்போது முழு கவனத்தை செலுத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். கூட்டணி குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. அதற்கான நேரம் வரும்போது உங்களிடம் அறிவிப்போம்” என்றார்.