முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிய மனு வாபஸ் | flyover corruption case against cm stalin and minister ponmudi

1339512.jpg
Spread the love

சென்னை: முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கின் விசாரணைக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை திரும்பப்பெற்றதை எதிர்த்தும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டதால் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996 – 2001 திமுக ஆட்சியில் சென்னையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன. இதில் ரூ.115 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக்கூறி கடந்த 2001-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் மேயரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் மற்றும் தற்போதைய முதல்வர் உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நடத்த ஒப்புதல் வழங்கி தமிழக அரசு கடந்த 2005-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன் பிறகு 2006-ம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் வழங்கி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. அதன்பிறகு அந்த வழக்கு கைவிடப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு ஆகியோருக்கு எதிரான இந்த வழக்கின் விசாரணைக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலை திரும்பப்பெற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரியும் கோவையைச் சேர்ந்த தொழிலதிபரான மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு தொடர்ந்தவரின் நேர்மையை சோதிக்கும் வகையில் ரூ. 1 லட்சத்தை உயர் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டது. மேலும், இதுதொடர்பாக பேரவைத் தலைவர் கடந்த 2006-ம் ஆண்டு எடுத்த முடிவை எதிர்த்து இப்போது வழக்கு தொடர முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை திரும்பப்பெற அனுமதி கோரி மனுதாரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவை திரும்பப்பெற அனுமதியளித்து அதை தள்ளுபடி செய்தனர். அத்துடன் அவர் செலுத்திய ரூ.1 லட்சத்தை திருப்பி வழங்கவும் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *