முதல்வர் ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்கா பயணம்: சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் முதலீட்டாளர்களை சந்திக்க ஏற்பாடு | CM Stalin US visit today

1301609.jpg
Spread the love

சென்னை: உயர்தர வேலைவாய்ப்பு, உயர்தர முதலீடு என்ற நோக்கில் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்.

தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக பல்வேறு புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தொழிலை எளிமையாக்கும் விதமாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு, அதற்கான கொள்கைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு, அதன்மூலம் ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதவிர, துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உட்பட பல்வேறு நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். இவற்றின் பயனாக, கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக ரூ.9.94 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, தமிழகத்துக்கு மேலும் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். இன்று இரவு 10 மணிக்கு எமிரேட்ஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து முதல்வர் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். விமான நிலையத்தில் அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் முதல்வரை வழியனுப்ப உள்ளனர்.

உயர்தர வேலைவாய்ப்பு, உயர்தர முதலீடு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்த பயணத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில், தொழில் தொடங்க தமிழகம் வருமாறு முதலீட்டாளர்களுக்கு அவர் அழைப்பு விடுப்பதுடன், முக்கிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது. 31-ம் தேதி, புலம்பெயர்ந்த தமிழர்களுடன் கலந்துரையாடுகிறார்.

செப்.2-ல் சிகாகோ செல்கிறார். அங்கு 12-ம் தேதி வரை தங்கி யிருக்கும் முதல்வர் ஸ்டாலின், ‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசுகிறார். கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார். செப்.7-ம் தேதி அயலக தமிழர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ஏற்கெனவே அமெரிக்கா சென்றுள்ள தொழில் துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில் 17 நாட்கள் தங்கி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், பயணத்தை முடித்துக் கொண்டு செப்.12-ம் தேதி சென்னை திரும்புவார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *