திருநெல்வேலி: தமிழக முதல்வர் ஸ்டாலின் கிராமப்புற மக்களின் நிலைமை குறித்த கள யதார்த்தம் தெரியாமல் உள்ளார் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு வரும் ஜனவரி 7-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. கடந்த 6 மாதங்களாக தென் மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படுகிறதா என்பது குறித்த ஆய்வு மேற்கொண்டு வருகிறேன்.
பல கிராமங்களில் பொதுக்கழிப்பிடம், வீடுகளில் கழிப்பிடம் இல்லாத நிலையே தற்போதும் தொடர்கிறது. கிராமங்களின் பல இடங்களில் சாலை வசதிகள் செய்யப்பட்ட போதிலும், மொத்தமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் வாழும் பகுதிகளில் சாலைகள் போடப்படவில்லை. இந்த சமூக மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். கிராம ஊராட்சி தலைவர்களாக இருக்கக்கூடியவர்கள் சாதிய பாகுபாடு பார்க்கும் நிலையே தற்போதும் உள்ளது.
மோதல்கள் ஏற்பட்ட கிராமங்களுக்கு பேருந்து வசதி மீண்டும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் மாணவ மாணவிகள் நடந்து சென்று கல்வி கற்கும் நிலை ஏற்படுகிறது. தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு அடிப்படை வசதிகளையும் முழுமையாக செய்து தர வலியுறுத்தியும் நான்கரை ஆண்டுகளாக திமுக அரசு எதையும் செய்யவில்லை. இதைக் கண்டித்து திருநெல்வேலியில் வரும் நவம்பர் 20-ம் தேதி எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு முறையான வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. இதன் காரணமாக அவர்கள் தவறான வழிக்குச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை எனில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதற்கான விலையை ஆளும் கட்சியினர் தர நேரிடும். வாக்கு சேகரிக்க வர முடியாத நிலை ஏற்படும்.
பசியோடு இருந்தாலும் வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன். வரும் தேர்தலுக்குப்பின் பாகுபாடற்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை வசதிகளை செய்து தரும் அரசு அமைய வேண்டும்.
தற்போது தமிழகத்தில் ஆளும் அரசு விளம்பர அரசாக, வெற்று அறிக்கை கொடுக்கும் அரசாக உள்ளது. கள யதார்த்தத்தை முதல்வரிடம் தெரிவிப்பதில்லை. அவருக்கு பல யதார்த்தம் தெரியாத நிலை உள்ளது. திங்கட்கிழமை நடக்கும் மனு நீதி நாள் சம்பிரதாய நடவடிக்கையாக உள்ளது.
அதிகாரிகள் கிராமங்களுக்கே நேரடியாக சென்று மக்களின் நிலைமையை அறிந்து அவர்களிடம் மனுக்களைப் பெற்று அதற்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார். கூட்டணி அரசியல் நிலைப்பாடு குறித்து ஜனவரி மாதம் தெரிவிக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.