கோவை: முதல்வர் ஸ்டாலின் நாளை (ஆக.9) கோவை வருகையையொட்டி, கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 1,941 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை (ஆக.9) காலை கோவை வருகிறார். கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு, ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து உக்கடம் – ஆத்துப்பாலம் சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். பின்னர், சூலூரில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார்.
முதல்வரின் கோவை வருகையை முன்னிட்டு, மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தலைமையில் 4 துணை ஆணையர்கள் மேற்பார்வையில், 19 உதவி ஆணையர்கள், 45 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1,941 காவலர்கள் மாநகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவிர, மாநகரில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முதல்வரின் வருகையையொட்டி மாநகரில் நாளை (ஆக.9) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகர காவல்துறையினர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், அவிநாசி சாலை வழியாக முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாகனங்கள் வர உள்ளதால், பொதுமக்கள் அவிநாசி சாலையை தவிர்த்து, பின்வரும் மாற்றுப் பாதைகளை பயன்படுத்தி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். காந்திபுரம் மேட்டுப்பாளையம் சாலை, 100 அடி சாலையில் இருந்து அவிநாசி சாலை வழியாக, ஈரோடு, சேலம் செல்லக்கூடிய வாகனங்கள் சத்தி சாலை, கணபதி, சரவணம்பட்டி வழியாக காளப்பட்டி சாலை, காளப்பட்டி நால்ரோடு வழியாக வீரியம்பாளையம் சாலை, தொட்டிபாளையம் பிரிவு வழியாக அவிநாசி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
பொள்ளாச்சி, பாலக்காடு பகுதிகளிலிருந்து ஒப்பணக்கார வீதி, பூமார்க்கெட், சிந்தாமணி, டி.பி.ரோடு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை, செல்வபுரம் உயர்நிலைப்பள்ளி, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி சாலை, சொக்கம்புதூர் வழியாகவோ அல்லது செட்டிவீதி, சலீவன் வீதி, காந்திபார்க் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி லாலி சாலை சந்திப்பு, ஜிசிடி சந்திப்பு, கோவில்மேடு, தடாகம் சாலை, இடையர்பாளையம் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
ராமநாதபுரம், சுங்கம் பகுதிகளிலிருந்து சிஎம்சி மருத்துவமனை, பெரியகடைவீதி, டவுன்ஹால் வழியாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் சுங்கம், வாலாங்குளம் சந்திப்பு, உக்கடம் சந்திப்பு, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் வழியாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களுக்கு செல்லலாம். காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கோவை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.