முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் இன்று(ஜூலை 31) சந்தித்தார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, ஓ. பன்னீர்செல்வம் இன்று காலை சந்தித்துப் பேசினார். சென்னை, அடையாறு பூங்காவில் இன்று காலை நடைப்பயிற்சி சென்றபோது இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். அப்போது, முதல்வர் ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து ஓபிஎஸ் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
சென்னையில் வியாழக்கிழமை முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், மதியம் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் அணியினர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு இன்று மாலை திடீரென சென்ற ஓ.பன்னீர்செல்வம் அவருடன் சந்திப்பு நடத்தினார். ஓ. பன்னீர்செல்வத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீட்டு வாசல் வரை வந்து வரவேற்றார்.
தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்திருந்த நிலையில், ஓ. பன்னீர்செல்வமும் முதல்வரைச் சந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியுள்ள ஓ.பன்னீர்செல்வம், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுடன் சந்தித்துள்ளதால், அவர் திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.