முதல் ஒருநாள்: மூவர் அரைசதம்; இந்தியா வெற்றி!

Dinamani2f2025 02 062f65yvaqrg2fap25037476855607.jpg
Spread the love

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று (பிப்ரவரி 6) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.

இருவர் அரைசதம்

இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் களமிறங்கினர். இந்த இணை இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய பில் சால்ட் 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பென் டக்கெட் 32 ரன்கள், ஜோ ரூட் 19 ரன்கள் மற்றும் ஹாரி ப்ரூக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் விலகல்!

இதனையடுத்து, கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஜேக்கோப் பெத்தேல் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தனர். ஜோஸ் பட்லர் 52 ரன்களிலும், ஜேக்கோப் பெத்தேல் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், களமிறங்கிய வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.

இறுதியில் 47.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது ஷமி, அக்‌ஷர் படேல், மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

மூவர் அரைசதம், இந்தியா வெற்றி

249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். ரோஹித் சர்மா 2 ரன்களிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

AP25037478383891

இதனையடுத்து, ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக விளையாடியது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இதையும் படிக்க: கபில்தேவ், ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜடேஜா!

தொடக்கம் முதலே சீரான இடைவெளிகளில் பவுண்டரிகளை விரட்டி விளையாடி வந்த ஷுப்மன் கில்லுடன் அக்‌ஷர் படேல் ஜோடி சேர்ந்தார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்‌ஷர் படேல் அவரது பங்குக்கு அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவர் 47 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 96 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து சாக்யூப் மஹ்முத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள் அடங்கும்.

இறுதியில் இந்திய அணி 38.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இதையும் படிக்க: ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் வருண் சக்கரவர்த்தி!

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் மற்றும் சாக்யூப் மஹ்முத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கோப் பெத்தேல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *