கடந்த 2015-ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம், அதன் புதுமையான திரைக்கதை மற்றும் திகிலூட்டும் காட்சியமைப்புகளாலும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான டிமான்ட்டி காலனி 2 நேற்று (ஆகஸ்ட் 15) முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தையும் இயக்கியுள்ளார். பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்ரமணியம், ஆர்.சி.ராஜ்குமார் ஆகியோர் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.
முதல் பாகம் நடந்த 2015 காலகட்டத்திற்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் கதை தொடங்குகிறது. டெபியின் (பிரியா பவானி சங்கர்) கணவரும், அவரது நண்பர்களும் 2009 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைக்கு 6 ஆண்டுகள் கழித்து சீனத் துறவி ஒருவரின் உதவியுடன் டெபி தனது கணவரின் ஆன்மாவுடன் பேச முயற்சிக்கிறார். அப்போது முந்தைய பாகத்தில் அதே நாளில் இறக்கும் ஸ்ரீநிவாசனின் (அருள்நிதி) ஆன்மாவுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நிலையில் ஸ்ரீநிவாசன் உயிருடன் இருந்தால் தான் அவரது சகோதரர் ரகு (அருள்நிதி) உயிர் வாழ்வார் என்பது தெரிய வருகிறது.
ஸ்ரீநிவாசனின் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கும் ரகு – டெபி கூட்டணி அதில் வெற்றியடைந்தார்களா, டிமான்ட்டி காலனியின் சாபத்திலிருந்து தப்பித்தார்களா, இந்த உயிரிழப்புகளுக்கானக் காரணம் என்ன என்பது போன்ற கேள்விகளுக்கு மிக நீண்ட பதிலை படம் வழங்கியிருக்கிறது.
படத்தின் முக்கியக் கதாபாத்திரமாக நடித்துள்ள பிரியா பவானி சங்கர், அதிக நேரம் திரையில் வந்தாலும் சலிப்பூட்டாமல் படத்தினை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதைத் தனது நடிப்பினால் சிறப்பாகச் செய்திருக்கிறார். இரு வேடங்களில் நடித்துள்ள அருள்நிதிக்கு, ஸ்ரீநிவாசன் கதாபாத்திரத்தில் பெரிய வேலை இல்லை என்றாலும், சுயநலமான இளைஞனாக ரகு பாத்திரத்தில் தனது பங்கிற்குச் சிறப்பாக நடித்துள்ளார். இவர்களுடன் படம் முழுக்க வரும் அருண் பாண்டியன், முத்துக்குமார், சீனத் துறவி ஆகியோரும் தங்களது பாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.
சாம். சி. எஸ் இசையில் பிண்ணனி இசை திகில் கிளப்பும்படி உள்ளது. ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் படத்தில் குறிப்பிட்ட சில திகிலான காட்சிகளை நல்லத் திரையனுபவமாக மாற்றியுள்ளார். காட்சிகளின் விறுவிறுப்பைத் தக்க வைத்த எடிட்டர் குமரேஷ் டி. சில இடங்களில் நீளத்தைக் குறைக்க முயற்சித்திருக்கலாம்.
முதல் காட்சியில் நடக்கும் தற்கொலைகள், டிமான்ட்டி காலனிக்குள் மீண்டும் சிலர் சிக்கிக்கொள்வது, வவ்வால்கள் துரத்துவது என பயத்தை அதிகப்படுத்தும் காட்சிகள் நன்றாக வந்துள்ளன.
முதல் பாகத்துக்கான தொடர்ச்சியாகக் குறிப்பிட்டுள்ள காட்சிகள் சரியான முறையில் அமைந்துள்ளன. டிமான்ட்டி காலனியின் ஆறு ஆண்டுகள் சுழற்சி, டிமான்ட்டி ஆவிகளுக்கெனத் தனி உலகம், ஒவ்வொரு சுழற்சியிலும் சிக்க வைக்கப்படும் மனிதர்கள், லைப்ரேரியன் ட்விஸ்ட் என படத்தில் ’அட’ சொல்லவைக்கும் சில காட்சிகள் மூலம் அடுத்தடுத்தக் காட்சிகளுக்கான எதிர்பார்ப்பு கூடுகின்றது.

ஆனால், முதல் பாகத்தில் இருந்த திகிலூட்டும் காட்சிகள் கொடுத்த உணர்வைப் பார்வையாளர்களுக்கு அளிக்க ஏராளமான காட்சிகள் இருந்தும், இந்தப் பாகத்தில் பேய்ப்படம் என்னும் உணர்வை விட க்ரைம் த்ரில்லர் படம் பார்ப்பதைப் போன்ற உணர்வு தோன்றுவது சற்றே நெருடல். வெள்ளைக்காரரின் பேய் தோன்றும் போது வரும் சத்தம் தரும் பயம் இந்தப் பாகத்தில் சாதாரணமாகக் கடந்து செல்லும்படி உள்ளது.
திரைக்கதையில் அனைத்து சம்பவங்களையும் இணைக்க முயன்றிருப்பதும் ஒரு கட்டத்தில் போதும் போதும் என்றாகி விடுகிறது. நீண்ட புத்தமதச் சடங்கு காட்சிகள், முதல் பாதியின் சில காட்சிகள் என நீளத்தைக் குறைத்து திகில் உணர்வைக் கூட்ட கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
குறைகள் இருந்தாலும் படத்தின் இறுதிக் காட்சிகளில் தெரிய வரும் சஸ்பென்ஸ், அடுத்த பாகத்துக்கான தொடர்ச்சி என படம் முடியும்போது நல்ல திரையரங்க அனுபவத்தை டிமான்ட்டி காலனி 2 வழங்குகிறது.