யார் இந்த ரேகா குப்தா?
50 வயதான ரேகா குப்தா 1974 ஆம் ஆண்டில் ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தில் அமைந்துள்ள நந்த்கர் கிராமத்தில் பிறந்தவர். அவரது தந்தை பாரத ஸ்டேட் வங்கியில் அலுவலராகப் பணியாற்றியவர். 1976 ஆம் ஆண்டில், ரேகா குப்தாவுக்கு இரண்டு வயது இருக்கும்போது அவரது குடும்பத்தினர் தில்லிக்கு குடிபெயர்ந்தனர். அதன் பிறகு அவர் தனது தொடக்கக் கல்வியை தில்லியில் முடித்தார்.
1992 ஆம் ஆண்டு தில்லி பல்கலைக்கழகத்தின் தௌலத் ராம் கல்லூரியில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மூலம் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் ரேகா குப்தா. 1996-97 ஆம் ஆண்டில், தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவரானார். அங்கு மாணவர்கள் தொடர்பான பிரச்னைகளை எழுப்பினார்.
ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட ரேகா குப்தா 2007 ஆம் ஆண்டு வடக்கு பிதாம்பூராவிலிருந்து கவுன்சிலராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் நூலகங்கள், பூங்காக்கள் மற்றும் நீச்சல் குளங்கள் போன்ற பொது வசதிகளை மேம்படுத்துவதில் முக்கியப் பணியாற்றினார். 2012 ஆம் ஆண்டில் மீண்டும் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தெற்கு தில்லியின் மேயராகவும் பணியாற்றினார்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகள் உயர்கல்வியைத் தொடர உதவும் வகையில் “சுமேதா யோஜனா”வை தொடங்கினார். மேலும், பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.
தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ரேகா குப்தா, தில்லியில் பாஜக மகளிர் அணியின் பொதுச் செயலராகவும், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
இந்தாண்டு நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் போட்டியிட முதல்முறையாக வாய்ப்பைப் பெற்ற ரேகா குப்தா ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி கட்சியின் பந்தனா குமாரியை 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
தில்லியில் உள்ள முக்கியப் பிரச்னைகளை நன்கு அறிந்தவர் என்பதால் ரேகாவுக்கு முதல் முயற்சியிலேயே முதல்வர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க… கேஜரிவாலை தோற்கடித்தவருக்கு துணை முதல்வர் பதவி!