செட்டிநாட்டு குமாரராஜா முத்தையா செட்டியாரின் விருப்பப்படி, நடராசனின் உடல், கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டிருந்த காரில் ஏற்றப்பட்டது. அரசுப் பொது மருத்துவமனையிலிருந்து கார் புறப்பட்டது. கூடவே, சுமார் ஐயாயிரம் பேர் கைகளில் கறுப்புக் கொடிகளை ஏந்தி பேரணியாகச் சென்றனர். டாக்டர் தர்மாம்பாள், என்.சிவராஜ், மீனாம்பாள் சிவராஜ், சி.என்.அண்ணாதுரை, என்.வி.நடராஜன் உள்ளிட்டோர் பேரணியில் கலந்துகொண்டனர்.
கந்தசாமி கோவில் தெரு, தேவராஜ முதலியார் தெரு, தங்கசாலை வீதி, கொத்தவால் சாவடி, பிராட்வே, போர்ச்சுகீஸ் வீதி, ஏழு கிணறு பகுதிகள் வழியாகச் சென்ற பேரணி, மூலக்கொத்தளம் சுடுகாட்டை அடைந்தது. அங்கு நடராசனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நடராசனின் மரணம் சட்டமன்றத்தில் எதிரொலித்தது. அவர் இறந்து மூன்றாம் நாள் (ஜன 18) சட்டமன்றக் கூட்டம் நடைபெற்றபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முதல்வர் ராஜாஜியை நோக்கி சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். அப்போது, ‘நடராசன் என்கிற ஹரிஜன சிறுவர், இந்து தியாலஜிகல் பள்ளிக்கு எதிரில் மறியல் செய்ததற்காகக் கைது செய்யப்பட்டார். அவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது’ என்றார் ராஜாஜி.
முதல்வரின் பதில் பெரும் சர்ச்சையானது. நடராசனின் தந்தையான லட்சுமணன், ‘என் மகனுக்கு தமிழில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரியும். அப்படியிருக்கும்போது, அவனுக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று முதல்வர் சொல்வது மக்களை ஏமாற்றும் முயற்சி’ என்று வேதனையோடு கூறினார்.
இந்தித் திணிப்புக்கு எதிராக பெரும் உணர்ச்சி அலையை உண்டாக்கியது நடராசனின் மரணம். பல ஊர்களில் அஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றன. அதில், இந்தித் திணிப்புக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தி எதிர்ப்புப் போர் மேலும் தீவிரமடைந்தது.