சத்தியநாராயணன், அனுப்பிய பணம் எந்தெந்த வங்கி கணக்குகளுக்கு சென்றது என சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் சோபனா தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியனுக்கும் (51) இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்படி தூத்துக்குடி முருகேஷ் என்பவரின் வங்கி கணக்குக்கு சத்தியநாராயணன் அனுப்பிய பணம் சென்றதை சைபர் க்ரைம் போலீஸார் கண்டறிந்தனர். அதனால் முருகேஷை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் முருகேஷின் மனைவி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ளார்.
அந்தக் குழுவில் பஞ்சவர்ணம் என்பவர் தலைவியாக இருந்து வருகிறார். அவரிடம் முருகேசனின் மனைவி, சுய உதவிக்குழுவில் 10,000 ரூபாய் கடனாக கேட்டிருக்கிறார். அதற்கு பஞ்சவர்ணம், நீங்கள் கடன் வாங்க வேண்டாம், அதற்கு பதிலாக உங்களின் வங்கி கணக்கை கொடுங்கள். அதில் சிலர் பணத்தை அனுப்புவார்கள். அதை எடுத்துக் கொடுத்தால் 15,000 ரூபாய் தருவதாக ஆசைவார்த்தைகளைக் கூறியிருக்கிறார். அதனால் முருகேசனின் மனைவி, தன்னுடைய கணவரின் வங்கி கணக்கு விவரங்களை பஞ்சவர்ணத்திடம் கொடுத்திருக்கிறார். அதில் சில லட்சம் ரூபாய் வந்திருக்கிறது. அந்தப் பணத்தை எடுத்து பஞ்சவர்ணத்திடம் முருகேசனின் மனைவி கொடுக்க, அதற்கு 15,000 ரூபாயை கொடுத்திருக்கிறார் பஞ்சவர்ணம். இந்தத் தகவலை தெரிந்ததும் முருகேசன், மகளிர் சுயஉதவிக்குழு தலைவி பஞ்சவர்ணம் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் இந்த மோசடிக்கு உதவிய குற்றச்சாட்டில் பஞ்சவர்ணத்தின் தோழி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எஃப்சி (35) என்பவரையும் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், “இந்த வழக்கில் இதுவரை நான்கு பேரை கைது செய்திருக்கிறோம். இவர்கள் அனைவரும் மோசடி கும்பலுக்கு வங்கி கணக்குகளை கொடுத்து கமிஷன் பெற்றவர்கள். இதில் மகளிர் சுய உதவிக்குழுவின் தலைவியாக இருக்கும் பஞ்சவர்ணம், அவரின் தோழி எஃப்சி ஆகியோர் தங்களுக்கு தெரிந்த பெண்களிடம் வங்கி கணக்கு விவரங்களை பெற்று மோசடி கும்பலுக்கு கொடுத்து கமிஷன் பெற்று வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் கொடுத்த வங்கி கணக்குகளில் 45 லட்சம் ரூபாய் வரை மோசடி கும்பல் அனுப்பி அதை பெற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. பஞ்சவர்ணத்துக்கும் மோசடி கும்பலுக்கும் இடையே புரோக்கராக சிலர் செயல்பட்டிருக்கிறார்கள். அவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றனர்.