முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் | High Court says postgraduate teacher examination cannot be postponed

1379302
Spread the love

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்கும் படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாலும், இத்தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களால் தேர்வுக்கு தயாராக இயலவில்லை என கூறி, தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்த போது, தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த தமிழக அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீலகண்டன், தற்போதைய நிலையில் தேர்வை தள்ளி வைத்தால் அது விண்ணப்பதாரர்களுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதை பதிவு செய்து கொண்டு நீதிபதி, தேர்வை தள்ளி வைக்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *